Tuesday

வ.உ.சி. மேடைப் பேச்சினை நேரில் கண்ட வையாபுரி பிள்ளை

 பெரியவர் மேடைப் பேச்சினை  நேரில் கண்ட வையாபுரி பிள்ளை- 2


தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை திருநெல்வேலிக்கு வந்து கீழ ரத வீதியில் அம்மன் சன்னதிக்கு எதிரே பேசப் போகிறார் என்று ஒரு வதந்தி.

குறித்த நேரத்திற்கு முன்பே ஜனங்கள் பெருந்திரளாக கூடியிருந்தார்கள். நானும் இந்து கலாசாலையிலிருந்து நேரே போய்ச் சேர்ந்தேன். குறித்த நேரம் கடந்து விட்டது. ஆனால் ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தார்களே யல்லாமல் கலைந்து போகவில்லை. சுமார் ஆறு மணிக்கு மேல் வ.உ.சி. வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்தவுடன் முதலாவது இவர் என்ன பேச முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் விசயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்ன முறை என்னை வசீகரித்தது.

அன்னிய அரசாங்கத்தினர் நாம் சிறிதும் முன்னேறவொட்டாத படி வாணிகம் முதலியன புரிந்து, நம்நாட்டுச் செல்வத்தைச் சுரண்டிகொண்டு போவதைக் குறித்து விஸ்தராமாகப் பேசினார்.ஒவ்வொருவனும் தேசாபிமானமுடையவனாக இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதைப் பற்றி பேசும்பொழுது அவர் தம்மையே மறந்து பரவசமாய் நின்று கேட்போர் உள்ளத்தை நேரடியாய்த் தாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் பேசியிருப்பார். கேட்ட மக்கள் அனைவரும் மிக்க குதூகலமுற்றனர்.

வேதியன் பிள்ளைக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்

 வேதியன் பிள்ளைக்கு கோவில்பட்டியிலிருந்து 28.03.1929 ல் பெரியவர் வ.உ.சி. எழுதிய கடிதம்:


அன்பார்ந்த தம்பியவர்களே,

நீங்கள் மார்ச் மாதம் 8 –உ எழுதியனுப்பிய கடிதம் வரப்பெற்றேன். அதிற்கண்ட செய்திகளைப் பார்க்குந்தோறும் எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த துக்கம் உண்டாகிறது.

சென்ற 2,3 வருஷங்களுக்குள் லைப் அஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து எனக்கு கிடைத்த சுமார் ரூபா இரண்டாயிரமும் செலவாகித் தமிழ்ப் பண்டிதர் சுப்பிரமனியபிள்ளையவர்களிடம் பிராம்சரி நோட்டின் பேரில் வட்டிக்கு ரூபா 250.00 ம் இவ்விடத்திலுள்ள அள. சித. அள. வட்டக்கடையில் 11/4 வட்டிக்கு ரூ 500.00 ம் கடன் வாங்கியிருக்கிறேன். முந்திய கடன்கள் வேறு இருக்கின்றன். எனது வக்கீல் வரும்படி வக்கீல்கள் மிகுதியாலும் லா டெலிட்டுகள் மிகுதியாலும் மிகக் குறைந்து விட்டது.

என் ஸ்வாதார சொத்துக்கள் அடமானக் கடனுக்குட்பட்டிருக்கின்றன. தங்கள் கடிதம் வந்ததும் முதல் வட்டிக்காவது வட்டக் கடையில் கடன் வாங்கலாமென்று முயற்சித்தேன். என் நிலைமைகளையும், என் முதுமையையும் அறிந்தவர்களாயிருக்கிறபடியால் , எனக்கும் கடன் கொடுக்க இஷ்டமில்லாமல் “பணம் இல்லை” என்ற பொய்க் காரணத்தைச் சொல்லி விட்டனர். நமது மூத்த மகளைச் சென்ற வருஷத்தில் ஒரு B.A.B.L. க்கு பெண் கேட்டனர். ரூ 1500.00 க்கு நகைகள் போட வேண்டுமென்கின்றனர். அதற்குச் சக்தியில்லாமல், அம் மாப்பிள்ளைக்குக் கொடுக்க நான் இசைய வில்லை. இப்பொழுதும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்கத் தயாராகின்றனர். இப்போது ஞானம்பாளிடமிருக்கிற சுமார் ஆயிரம் ரூபா நகைகளுக்கு மேல் என்னால் போட முடியாதென்பதைத் தெரிந்து என்னிடம் வராமல் இருக்கின்றனர். 3 ரூபா, 2 ரூபா, 1 ரூபாவுக்குச் சில சமயங்களில்  அரிசி வாங்க வேண்டியதாகப் பொருட் கஷ்டம் ஏற்படுகின்றது. இந்த நிலைமையில் நான் என்ன செய்யக் கூடும்.! இது நிறக.

ஒரு வாரத் தமிழ்ப் பத்திரிக்கை தொடங்குவதற்குரிய விளம்பரம் முதலியன வெளிப்படுத்தி இலங்கைக்கும், பர்மாவுக்கும் எனது ஏஜெண்டாகக் தாங்கள் போய்ச்  சந்தாதாரர்களும், நன்கொடைகளும் சேர்த்து வந்து என் பெயரால் பத்திரிக்கையைத் தாங்கள் நடத்தலாமா என்று ஆலோசனை செய்யுங்கள். மேற்படி இரண்டு நாடுகளிலும் என் பெயருக்குக் கொஞ்சம் மதிப்பு உண்டு. அங்கு போவதற்குரிய செலவுக்கு என் செலவோடு செலவாகப் பணம் தருகிறேன். அங்கு தக்க உத்தியோகம் கிடைத்தாலும் , அதனை தாங்கள் பெறலாம். எனக்கு இன்ன செய்வதென்று ஒன்றும் தோன்ற வில்லை. இந்தக் கடிதம் எழுதவும் மனம் இல்லை. தங்கள் கடிதத்திற்கு பதில் எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. அதனால் இதனை எழுதினேன். நமது சகோதரர் ஸ்ரீமான் C. விருத்தாசலம் பிள்ளையவர்கள் சவுக்கியமாயிருக்கிறார்களா!

கடவுள் துணை

வ.உ.சிதம்பரம்.

இந்தக் கடிதம் 1960  “ அமுதசுரபி “ மாத இதழில் வெளி வந்ததையடுத்து வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்த வ.உ.சி. கடிதங்கள் (1902 – 1936)  என்ற பேரில் சேகர் பதிப்பகம் மூலம் 1984 ம் ஆண்டு இந்த நூலினை கொண்டு வந்துள்ளார்.

என் கருத்து:

இந்தக் கடிதத்தினை  தட்டச்சு செய்த போது என்னை மீறி கண்ணீர் வருவதை தடுக்க என்னால் இயலவில்லை. ஒரு பக்கம் சிறைக்குப் போய் வந்ததால் அன்றைய காலத்தின் சமூக புறக்கணிப்பு, தன்னுடைய மகளை வரதட்சனை கொடுக்க முடியாமல் அதற்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்களா என்ற அவரது எதிர்பார்ப்பு, அவரிடம் பணம் கொடுத்தால் வராது என்பதை அவரது வயோதிகத்தை குறிப்பிடுவது இதற்கிடையேதான் கோவில்பட்டியில் வசித்த காலத்தில் தொல்காப்பியம் – இளம் பூரணம்- பொருளதிகாரம் ( அகத்திணையியல், புறத்திணையியல் 2ம் பதிப்பாக வெளிவருகிறது (1928)), தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (1928), எந்த மனநிலையில் தமிழுக்கும் பணியாற்றி வந்துள்ளார். பெரியவருடைய இந்த கடிதம் அவர் எழுதிய வெண்பாவை மீண்டும் உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்.

வந்த கவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

தந்த சிதம்பரமன தாழ்ந்தின்று சந்தமில் வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்

நாச்சொல்லும் தோலும் நலிந்து.


எல்லாரும் கைவிட்டார் ஏந்திழையும் துன்புற்றாள்

வல்லாரும் வல்லுநரும்  மாநிலத்துச் - செல்லா

திவன் பேச் சினியென் றென்னை யிகழ்ந்தார்

என் மெயத் தவன் பூமி நாதன் தடத்து

இந்த கடிதத்தை தட்டச்சிட்டப் போது பெரியவர் வ.உ.சி. எழுதிய கண்ணீர் வரக்கூடிய இந்த வெண்பாவும்  மனதிற்குள் வந்து உருக்குலைக்கிறது.

Monday

சேலம் 3 அரசியல் மாநாடு 1927

 வ.உ.சிதம்பரனார் 150 ஆம் பிறந்த நாள் (5.9.1972).....


1927நவம்பர் மாதம் 5,6 தேதிகளில் 


திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற

சேலம் 3 வது அரசியல் மாநாடு

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றைய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள் முன்னரிருந்தே நடை பெற்றது. நகர் முழுவதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்கார மாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு.வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப் பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிரகாரம் நடை வீதி வழியாய் பாண்டு வாத்தியங் களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது. 

தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் திரு. ஆர்.கே. ­ண்முகம் செட்டியார் அவர்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும் இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர் கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டி யாய் ‘ஜே’ கோ­ங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணி வரையில் நடைபெற்றது. பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்

மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆகிவிட்டது. 

தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள்.

 தலைவர் கரகோ­த்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்தி லமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புக் கமிட்டி அங்கத்தினர்களும் தலைவர் களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள்: திரு. பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார், ராவ் சாகிப் எல்லப்ப செட்டியார், எம்.எல்.சி., திரு.ஆர்.கே.­ண்முகம் செட்டியார், எம்.எல்.ஏ., திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு. தெண்டபாணி பிள்ளை, திருவாளர்கள் டி.எஸ். ஜெகராஜ் பி.எ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ., பி.எல்., கே. சிவசங்கர முதலியார், டாக்டர் ரங்கய்ய நாயுடு, பி.இராஜமாணிக்கம் பண்டாரம், டி.வி. பங்காரு செட்டியார், எ.கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ். அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என்.கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அமீத் சாயபு, ஏ. வையாபுரி பண்டாராம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி. பொன்னுசாமி முதலியார், கே. மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், ராமசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார், பி.எ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு. சிவப் பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார், அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயண செட்டியார், பி. சிவராவ் எம்.எஸ்.சி. முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள்.

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ். தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளைவரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகா நாட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க திரு. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிரேரேபிக்க ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார் நாமக்கல் உஸ்மான் சாயுபு, எம். சாமிநாத அய்யர், ஆர்.கே. சண்முக செட்டியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆதரிக்க தலைவர் அவர்கள் கரகோ­த்தினி டையே பதவியையேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார்.

குறிப்பு : மற்றைய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளிவரும்.

நிறைவேறிய தீர்மானங்கள்

1. இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்த்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

2. வரப்போகும் ராயல் கமி­ன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமி­னாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போது மானஅளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமி­னில் இல்லாவிட்டால் தேசத் தாருக்கு கமி­ன் திருப்திகரமாயிருக்காதென்றும் இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

3. அ) கெளகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர் களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக் கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம் ஒப்புக்கொள்வது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியேகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச் சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

4. ‘காமன் வெல்த்து ஆப் இந்தியா’ மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவை யிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும் படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா வி­யத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாநாடு மிகவும் பாராட்டுகிறது.

5.அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக வி­யங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப் பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாநாடு வருந்துகிறது.

ஆ) தீண்டாமை யயாழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணர்ச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு கேட்டுக் கொள்கிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிர மங்கள் ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

6. ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்வி­யத்திலுள்ள பிறப்புரிமையைப பிடுங்கிக் கொண்ட தினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச் செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

7. தமிழ்நடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரஸ் ஆட்கள் சேர முடியாமல தடை செய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

8. வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

9. சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டூர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் துக்காக தண்ணீர் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

10. கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்க வேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டியதும் மிகவும் அவசியமென்று இந்த மகாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது. (குடிஅரசு, 18.11.1927)

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 1

சேலம் அரசியல் மகாநாட்டில்

எனது பெருஞ்சொல்

மூன்றாவது அரசியல் மகாநாடு

கடவுள் வணக்கம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதெற்றுத் தான்முந் துறும்.

என்றபடி எளிமை யுற்றிருக்கா நின்ற எனது நாட்டினை வலிமைப் படுத்துவேன் என்று ஊக்கும் எனக்கு எல்லாம் வல்ல இறைவன் தனது  உடையை இறுக உடுத்துக்கொண்டு எனது வழிகாட்டியாக என் முன் செல்வானாக.

செய்ந்நன்றியறிதல்

எழுமை ஏழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு

என்றபடி என் நாட்டினை மேம்படுத்தக் கருதி யான் ‘சுதேசிய நீராவிக் கப்பல் சங்க’த்தை நிறுவிய காலத்தில் பல்லாயிரக்கணக்காகப் பொருள் அளித்துத் துணைபுரிந்தும் அவ்வூக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்து வாடிய காலத்தில் வேண்டியவற்றை ஈந்து என் வாட்டத்தைக் களைந்தும், தேசாபிமானமும் என்பால் உளதோ என்று சிலர் ஐயமுறும் இக்காலத்தில் தேசாபிமானத்திற்கே உறைவிடம் என்று சொல்லும்படியான சிறப்பு வாய்ந்த சேலம் ஜில்லாவாசிகள் கூடிய இம்மகாநாட்டின் தலைமைப் பதவியை நல்கி மேன்மையளித்தும், நீங்கள் எனக்குச் செய்த நன்றியை எழுமை எழுபிறப்பும் உள்ளுவேனாக.

என்னைப் பற்றிச் சில சொற்கள்

கல்கத்தா நகரத்தில் நடந்த விசே­ காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசீயக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசே­ கூட்டம், ஒன்றைக் கூட்டி மேற்கண்ட விசே­க் காங்கிரஸ் மகாநாட்டின் தீர்மானங்களை எல்லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றிப் பத்திரிகைகளிற் பிரசுரித்துவிட்டு யான் காங்கிரஸினின்று விலகி இதுகாறும் ஒடுங்கியிருந்தேன். 

என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசே­ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்பிக் காங்கிரஸில் புகலாம் என்று நினைத்தேன்.  

என்னைப் போல காங்கிரஸை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசே­ மகாநாடு கூட்டிப் பிராமணரல்லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகாசபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாததென்று தீர்மானித்தார்கள்.

எனக்கும் என் தேசத்திற்கும் நல்லகாலம் பிறந்துவிட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கவன்று கொண்டிருந்தேன்.

உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்றபடி எனது நண்பர்களாகிய நீங்கள் உங்களுடைய இம் மகா நாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளை இட்டீர்கள். அக்கட்டளை எனக்கு ‘காலத்தினாற் செய்த நன்றி’யும் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போலும், ஆயிற்று.

‘தேச அரசாட்சியை மீட்பதற்காக தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானம் இல்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும் ‘இராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுத் தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம்பிள்ளை’ என்று பொருள்படும்படி எழுதிய ஒரு பத்திரிகையாசிரியர் புன்மொழியும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. 

தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அவிவதும் இல்லை. ‘விளக்குப் புகவிருள் சென்றாங்கொருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்’ என்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோகம் இருள் நில்லாது. இவ்வுண்மையினை அவர் அறிவாராக.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

என்று சிலர் என் சென்ற கால ஒடுக்கத்தைப் பற்றிக் கூறும் உயர்மொழியும், ‘பிராமண அபிமானி’ என்று பிராமணரல்லாத சிறுவர் சிலராலும், ‘வஞ்சக சொரூபி’ என்று பிராமணர் ஒருவராலும் அநியாயமாகப் பழிக்கப்பெற்ற ஸ்ரீதிலகருடைய சீடன் வெளிவந்துவிட்டான் என்று பலர் பேசும் உயர் மொழியும் என்னைச் சேரும்படியான நற்காலம் வந்ததற்காக யான் பெரிதும் அக மகிழ்கின்றேன். 

அந்நற்கால வரவிற்குக் காரணஸ்தர்களாயுள்ள உங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்.

அவையடக்கம்

இது போன்ற மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பெரியார் ஒவ்வொரு வரும் ‘பெருமை பெருமிதமின்மை’, ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற படி தாம் அம்மகாநாட்டின் தலைமை வகித்தற்கு வேண்டிய அறிவும் ஆற்றலும் இல்லாதவரென்று தமது ‘பெருமிதமின்மை’யைக் கூறி யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லிப் ‘பெருமையும்’ ‘பெருஞ்சுட்டும்’ பெறுவர். 

பெரியார்க்கு இலக்கணம் பெருமிதமின்மை கூறலும், யார்யார்க்கும் தாழ்ச்சி சொல்லலும் என்றால், சிறியார்க்கு இலக்கணம் பெருமிதம் கூறலும், யார் யார்க்கும் உயர்ச்சி சொல்லலும் என்பது சொல்லாமலே விளங்கும். 

அது பற்றியன்றோ  ‘சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடும்’ எனவும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ எனவும் கூறியுள்ளார் நம் பெரியார். 

அவர் வாக்கைப் பின்பற்றிச் சில காரணங்கள் கூறி இம்மகாநாட்டின் தலைமை வகித்ததற்கு யான் தகுதி யுடையோன் என்பதை நிருபிக்கின்றேன். 

இம்மகாநாடு இந்தியன் நே­னல் காங்கிரசின் ஒரு கிளை. யான் ஒரு இந்தியன். இது சிறந்த தேசாபிமானிகள் கூடியுள்ள மகாநாடு. 

யானும் தேசாபிமானி என்று சொல்லிப் பெருமை பாராட்டுகின்றவன். 

இம்மகாநாட்டிற் குழுமியள்ளோரிற் பெரும்பாலார் பிராமணரல்லாதார். யானும் ஒரு பிராமணரல்லாதான். 

இந்த ஜில்லா சிறந்த ஒரு தமிழ்நாடு. யானும் சிறந்த ஓர் தமிழன். இம்மகாநாட்டில் முதன்மையாக நிற்போர் வருடக்கணக்கில் சிறைத் தீர்ப்புப் பெற்று வருடக்கணக்கில் சிறையில் வசித்தவர். யானும் ஏககாலத்தில் நடைபெறும் இரண்டு இருபது வருடங்கள் சிறைத் தீர்ப்புப் பெற்று ஒரு நாலரை வருடம் சிறையில் வசித்தவன். 

இம்மகாநாடு உங்கள் எல்லோராலும் மிக நேசிக்கப்பெற்றது. யானும் உங்களால் மிக நேசிக்கப்பெற்றவன். 

உங்களிற் பலர் உழவும், உபகாரமும் செய்கின்ற உண்மை வேளாளர். யானும் ஜாதி மாத்திரையில் ஒரு வேளாளன். 

உங்களிற் பலர் பலமில்லாத பிற ஜாதியாரைத் தாழ்த்துதலை இயற்கையாக கொண்டுள்ள ஜாதியாரென்று உண்மை தேசாபிமானிகளால் பழிக்கப் படுகின்றவர். யானும் அத்தன்மையான ஜாதியானென்று உண்மைத் தேசாபிமானிகளால் பழிக்கப்படுகின்றவன்.

இப்பல ஒற்றுமைகளால் யான் இம்மகா நாட்டில் தலைமை வகித்ததற்குத் தகுதியுடையோன். 

ஆயினும், பல வி­யங்களில் என் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயங்களும் மாறுபடலாம். என் அபிப்பிராயத்தை நீங்கள் கேட்டு, உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பின்னர் யான் எனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுதல் கூடும். 

ஆதலால் யான் சொல்பவற்றைப் பொறுமையோடு கேட்கும்படியாக உங்களை மிக  வணக்கத்தோடு பிரார்த்திக்கிறேன்.

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 2

சுய அரசாட்சி

நல்லாண்மை யயன்ப தொருவற்குத்          தான்பிறந்த

இல்லாண்மை யாக்கிக் கொளல்

என்று நமது முன்னோர் கூறியுள்ளார். 

அதாவது, ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது, தான் பிறந்த தேசத்தின் ஆள்கையைத் தன்னது ஆக்கிக் கொள்ளுதல். சுய அரசாட்சி அடைதலே நமது நோக்கம் என்று நமது காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளார்கள்.

ஆனால் ‘சுய அரசாட்சி’ என்றால் என்ன? சுய அரசாட்சி எது போலிருக்கும்? என்று அறிவாளிகளும் அடிக்கடி வினவக் கேட்டிருக்கிறேன். அவர் அதனை அறியாமல் வினவுகின்றனரா? அல்லது அறிந்திருந்தும் ஏனையோர் அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்து கொள்வதற்காக வினவுகின்றனரா? என்பது தெரியவில்லை. 

அது யாதாயினும் ஆகுக. சுய அரசாட்சியைப் பற்றி யான் அறிந்துள்ள வற்றைச் சொல்லுகின்றேன். 

சுய அரசாட்சி நான்கு வகைப்படும்.

1. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம் மகாஜனங்களால் அல்லது, அப்பிரதிநிதிகளால், (தேச அரசாட்சியை நடாத்துவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்று) தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். (‘மகா ஜனங்களால்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களால்’ எனவும், ‘பிரதிநிதிகளின்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களின்’ எனவும் பொருள்படும். ஆண்பால் பெண்பாலையும் குறிக்கும்). 

இவ்வரசு தன் தேசத்து அகக் காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல், முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும் சவாதீனமுமுடையது. இவ்வரசாட்சி பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்கா தேசத்திலும், தற்காலம் நடைபெறுகின்ற அரசாட்சி போன்றது. இதனைக் ‘குடியாட்சி’ (Republic Government) என்று கூறுவர் அறிஞர்.

2. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத்தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆலோசனை முடிவுப்படி தன்னை நெடுங்காலம் ஆண்டுவந்த, அல்லது ஆளவந்த அரசன் ஒருவனால் ஆளப்படுதல். 

இவ்வரசும் தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும், பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் (நொதும்பல் -விருப்பு வெறுப்பின்மை) என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும், சுவாதீன முடையது. இவ்வரசாட்சி இங்கிலாந்து தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. இதனை ‘கோனாட்சி’ (Monarchical Government)  என்பர் அறிஞர்.

3. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகள் ஆலோசனை முடிவுப்படி அம்மகாஜன மக்களால், அல்லது பிரதிநிதிகளால் (தேச அரசாட்சி நடத்துவதற்குத் தகுதி வாய்ந்தவனென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். 

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையது. 

பிறதேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய அரசுகளில் முதலாவது வகை அரசைச் சார்ந்தது. அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வகையான அரசாட்சி தற்காலம் எந்த தேசத்திலாவது நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

இதனைச் ‘சார்ந்த குடியாட்சி (Dependent Republican Government) என்பர் அறிஞர்.  

4. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்க தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அத்தேசத்தை நெடுங்காலம் ஆண்டு வந்த, ஆள வந்த, அரசன் ஒருவனால் ஆளப்படுதல்.

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும், சுவாதீனமுடையது. பிற தேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொது மலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய மூவகை அரசு களில் இரண்டாவது வகை அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வரசாட்சி ஆஸ்திரேலியா தேசத்திலும், கானடா தேசத்திலும், தென் ஆப்பிரிக்காத் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. 

இதனைச் ‘சார்ந்த கோனாட்சி’(Dependent Monarchical Government) என்பர் அறிஞர். முந்திய அரசு இரண்டும் ‘பேரரசு‘’ எனவும், பிந்திய அரசு இரண்டும் சிற்றரசு எனவும் வழங்கப்படும்.

மகாஜனங்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி நடைபெறா ஆட்சிகள் ‘அரசாட்சி’ என்று சொல்லப்படும் தகுதியுடையன அல்ல. ஆதலால் அவற்றின் கூறுபாடுகள் முதலியவற்றைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் விரும்பும் சுய அரசாட்சி

மேற்கூறிய நான்கு வகையான சுய அரசாட்சிகளுள் முன்னைய மூன்றில் ஒன்றை நாம் அடைய வேண்டுமென்று நம் தேசத்தாரில் ஒருவன் சொல்வானானால், அதுவே இந்தியன் பினல்கோடு 124பி பிரிவுப்படி குற்றமாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன். ஆதலால், அவற்றைப் பற்றி யான் ஒன்றும் பேசாது அம்மூவகை சுய அரசாட்சிகளும் நமக்கு ஆகாதவை என்று தள்ளிவிடுகின்றேன். 

ஆகவே நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி மேலே நான்காவது வகையாகக் கூறப்பட்ட சுயஅரசாட்சியே. 

அவ்வரசாட்சி தான் நம் தேசத்தின் தற்கால நிலைமைக்கும் பொருத்தமானதென்று கொள்ளத் தக்கது. 

நம் தேச பக்தர்களிற் சிலர் மேற்கூறிய நான்கு வகை சுய அரசாட்சிகளில் முதலாவது வகை சுய அரசாட்சி ஒன்றே நாம் வேண்டுவது எனக் கூறக் கேட்டிருக்கிறேன். 

அக்கூற்றுத் தற்கொல்லியும் பயனிற் சொல்லும் ஆமென்று யான் கருதுகின்றேன். 

ஆகவே, நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி நமது தேசத்து அகப்புறக் காப்புகள் முதலிய காரியங்களில் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராயும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் பெரிய பிரிட்டன்  (Great Britain) தேசத்து அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகும் கடப்பாடு உடையவராயும் இருக்கும் சுய அரசாட்சியே. 

இத்தகைய அரசாட்சியைச் ‘சுய அரசாட்சி’ எனச் சொல்லலாமோ? எனின், சொல்லலாம். என்னை? 

நமது தேசத்து அகப்புறக்காப்பு முதலிய காரியங்களிலெல்லாம் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராகலான்.

இச்சுய அரசாட்சிக்கே நாம் தகுதியுடையவரல்லர் என்று நம்மை ஆள்வோரும் நம் கிழவர் சிலரும் கூறுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணங்களிற் சில வருமாறு:

1. இச்சுய அரசாட்சிக்கு நாம் உண்மையில் தகுதியுடையோராயிருப்பின், அவரவர் தகுதிக்குத் தக்க ஸ்தாபனங்களை அவரவர்க்கு அளிக்கும் சர்வ நியாயாதிபதியான எல்லாம் வல்ல இறைவன் நம்மை நமது தற்கால சுதந்திர மற்ற நிலைமையில் வைத்திருப்பாரா?

2. நம்மிற் பெரும்பாலார் (Majority) பிறர் பொருள்களையும் உரிமை களையும் அபகரிக்க விரும்பாத நடுநிலைமையிலுள்ளரா யிருக்கினறரா? எளியோரை வலியோர் வருத்துங்கால், எளியோருக்கு உதவியாய் வலியோரை எதிர்க்க நம்மிற் பெரும்பாலார் சித்தமாயிருக்கின்றனரா? மதங்களை அழிப்பதிலும், அறங்களை வளர்ப்பதிலும், நம்மிற் பெரும்பாலார் விருப்ப முடையோரா யிருக்கின்றனரா? 

பெருந்தொகையினராயுள்ள ஜாதியார்கள் சிறுதொகையினராயுள்ள ஜாதியார்களைத் தாழ்த்தி, அவமதித்து, வருத்தும் சுபாவத்தை நம்மிற் பெரும்பாலார் விட்டுவிட்டனரா?

3. நாம் சுய அரசாட்சியை அடைவோமாயின், நம் தேசத்தில் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களுடையவும் நம்மால் அநியாயமாகத் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களுடையவும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் கவர முற்படோம் என்று அந்த ஜாதியார்கள் நம்புவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? 

அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பூரணமாக உண்டாலன்றி, அவர்கள் நம்முடன் சேர்ந்து சுய அரசாட்சி அடைவதற்கு ஒத்துழைப்பார்களா? அவ்விரு வகையான ஜாதியார்கள் என்னென்ன உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடைய விரும்புகின்றவர்கள் என்றாவது நாம் தெரிந்துள்ளோமா?

4. நம் தேசத்திலுள்ள பல மதஸ்தர்களும் தத்தம் மதச் செயல்கள் பிற மதஸ்தர்களைப் பாதிக்காதவாறு தத்தம் மதக் கோட்பாடுகளைத் திருத்திக் கொண்டனரா? 

இம்மதக் கோட்பாடுகள் மேற்சொல்லியபடி திருத்தப்படாத வரையில் நம்மவர்களுள் நெடுங்காலமாக நடந்து வருகின்ற மதச் சச்சரவு களும் சண்டைகளும் கொலைகளும் நீங்குமா? அவை நீங்காத வரையில் நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வொற்றுமை ஏற்படாத வரையில் நமக்குச் சுய அரசாட்சி வேண்டுமென்று நம்மை ஆள்வோரிடம் இரக்கவாவது நாம் அருகரா?

 இவர்கள் இவ்வாறு சொல்வதையும் நமது தற்கால நிலைமை யையும் கவனிக்குங்கால், நாம் விரும்பத்தக்கது மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியேயாம்.

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 3

 சுய அரசாட்சிக்கு வழி

ஒரு பேரரசின் துணையைப் பெற்றுப் போர்புரிதல், அல்லது தேசம் முழுவதும் ஒரே காலத்தில் புரட்சி செய்தல், சுய அரசாட்சி வழி என்று சிலர் கூறுகின்றனர். நமக்கு ஆகா என்று நாம் தள்ளிய மேற்கூறிய முதல் மூன்று வகைச் சுய அரசாட்சிகளுக்கும் அவ்விரண்டில் ஒன்றுதான்வழி. 

ஆனால், நாம் அடைய விரும்பும் மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சிக்கு அவ்வழிகளிற் செல்லுதல் அவசியம் இன்று. அன்றியும், அவ்வழிகள் தேச மக்கட்கும் பொருட்கும் அழிவம் கேடும் விளைவிப்பவை ; நமது காங்கிரஸ் கோட்பாட்டுக்கு மாறுபட்டவை ; நாம் கைக்கொள்ள முடியாதவை. ஆதலால் அவ்வழிகள் நாம் விரும்பும் சுய அரசாட்சியை அடைவதற்கும், நமது தேசத்தின் நிலைமைக்கும் பொருத்தமற்றவை யயன நாம் தள்ளிவிடுவோமாக.

நாம் விரும்பும் மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியை நாம் அடைவதற்கு வழிதான் யாது என்றால், நமது கிழவர்கள் ‘ஒத்துழைத்தல்’(Cooperation) என்கின்றனர். 

நமது தற்காலத் தலைவர்கள் ‘ஒத்துழையாமை’ (Non Cooperation)  என்கின்றனர்.

 நாம் ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமை யும்’ (Responsive Cooperation) என்கிறோம். 

இவை சொல் மாத்திரையில் மூன்றாகத் தோன்றுகின்றனவேயல்லாமல், உண்மையில் ஒன்றேயாம். 

இம் மூன்றும் இரப்புத்தான். ஆனால் சொல்லாலும் செயலாலும் வேறாகத் தோன்றுகின்ற இரப்பு. ஒத்துழைத்தல் என்பது நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதையேனும் நம் இராஜங்கத்தார் நமக்குத் தந்தாலும், தர மறுத்தாலும் நாம் அவர்க்கு வந்தனம் (Thanks) கூறி நமது தேச நிர்வாக வி­யத்தில் அவரோடு உடம்பட்டு உழைத்தல். 

‘ஒத்துழையாமை’ என்பது நாம் அடைய விரும்பும் நமது உரிமைகள் அனைத்தையும் ஒருங்கு நம் இராஜாங்கத்தார் நமக்குத் தரும் வரையில் நாம் அவரோடு, நமது தேச நிர்வாக வி­யத்தில் உடம்படாது மாறுபட்டு இருத்தல். ‘ஒத்துழைத்தலும் ஒத்துழை யாமையும்’ என்பது, நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதை யேனும் நம் இராஜாங்கத்தார் நமக்குத் தருவதாயிருந்தால், அதற்காக நாம் அவர்க்கு வந்தனம் (Thanks) கூறி அவரோட உடம்பட்டு உழைத்தலும், எதை யேனும் அவர் நமக்குத் தர மறுப்பாராயின் அது வி­யத்தில் நாம் அவரோடு உடம்படாது மாறுபட்டிருத்தலுமாம்.

‘ஒத்துழைத்தல்’ ‘இரப்பான் வெகுளாமை வேண்டும்’ என்னும் உண்மை யையும் ‘ஒத்துழையாமை’ ‘வேண்டாமை வேண்டவரும்’ என்னும் உண்மை யையும் ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்னும் உண்மையையும் உட்கொண்டுள்ளன.

எந்த இரப்பு எந்த உண்மையை கொண்டிருப்பினும், எல்லா இரப்பும் இரப்புத்தான். 

‘ஒத்துழைத்தல்’ தமக்கு உரியவற்றைப் பிறர் தரினும் தராவிடினும், அது நமது விதியயன்று கருதிப் பிறர்க்குப் பண்பு செய்யும் கிழவர் செயல் போன்றது. ‘ஒத்துழையாமை தின்பண்டம் முழுவதும் தமக்குத் தரும் வகையில் அதன் ஒரு பகுதியை ஏற்காது தாய் தந்தையரோடு கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் செயல் போன்றது.

 ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ தமக்குரியவற்றைத் தந்த போது உவந்தும் தராத போது வெகுண்டும் நிற்கும் காளையர் செயல்போன்றது.

இரத்தலால் சுய அரசாட்சி நமக்குக் கிடைக்குமா? எனின், நம் உரிமையை நம் இராஜாங்கத்தார் நமக்கு அளிக்கும்படி செய்யத்தக்க பெருமையோடு நாம் இரப்பின், சுய அரசாட்சி நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும். அப்பெருமை யாதெனின், நம் தேசத்துப் பல மத ஜாதித் தலைவர்களெல்லாம் ஒற்றுமைப் பட்டு இரத்தல். அது பற்றியே, நம் பாரதியார் ‘இரண்டு பட்டால் உண்டு வீழ்வு ; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று கூறியுள்ளார்.

சுய அரசாட்சி அடைவதற்கு நாம் ஒற்றுமைப்படுதல் இன்றியமையாத தொன்றாயிருக்குங்கால், நம் தலைவர்களில் சிலர் நம் சுதேச மன்னர்களின் ஆள்கைக்குட்பட்ட தேசங்களிலும் நம் சுய அரசாட்சி பரவ வேண்டுமென்றும், அதற்காக அத்தேசங்களின் குடிகளையும் நாம் காங்கிரஸ் மகாசபையில் சேர்த்துக் கொண்டு கிளர்ச்சி செய்ய வேண்டுமென்றும், பேசக் கேட்டிருக்கிறேன். 

இப்பேச்சு எனக்கு ஓர் புதுமையாக தோன்றிற்று. நாம் வேண்டுவது பெரிய பிரிட்டன் தேசத்து அரசரைச் சார்ந்திருக்கும் கோனாட்சி.  நம் சுதேச மன்னர்களின் அரசாட்சியும் பெரிய பிரிட்டன் தேசத்து அரசைச் சார்ந்துள்ள கோனாட்சிதானே? நம் பக்கத்திலுள்ள நாம் சுதேசக் கோனாட்சியை ஒழித்துவிட்டுப் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பிற தேசக் கோனாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்பது வியப்பன்றோ? அதற்காகச் சுதேச மன்னர்களின் குடிகளைச் சேர்த்துக்கொண்டு  நாம் கிளர்ச்சி செய்தல். அச்சுதேச மன்னர்கள் நம்மிடம் கொண்டுள்ள அநுதாபத்தைக் கெடுக்கும் அன்றோ? அச்சுதேச மன்னர்களின் அரசாட்சி, அவர்கள் தேசத்துக் குடிகளுக்குச் சுய அரசாட்சியன்றோ?

அக்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம்மன்னர்கள் அரசாட்சி செய்ய வேண்டுமென்பது, அக்குடிகள் அம்மன்னர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய உரிமை. அவ்வி­யத்தில் நாம் பிரவேசித்தல் தகுதியன்று. அதில் நாம் பிரவேசித்தல் நம் பக்கத்திலும் பகைமையை உண்டாக்குதலேயன்றி வேறன்று. அதனால் நம் காங்கிரஸ் மகாசபை, சுதேச மன்னர்களின் அரசாட்சி சம்பந்தமான காரியங்களில் தலையிடலாகாதென்று யான் வற்புறுத்துகின்றேன்.

சில வரு­ங்களுக்கு முன் வரையில் நம் காங்கிரஸ் நமது இராஜீய நோக்கங்களை இங்கிலாந்து முதலிய தேசங்களில் பரப்புவதற்காக இங்கிலாந்தில் சில நண்பர்களை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக ‘இந்தியா’ என்னும் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தது. நமது நோக்கங்களைப் பற்றிய பிரச்சாரங்கள் செய்வதற்கு நாம் இங்கிலாந்திலும் மற்றைய தேசங்களிலும் நமது ஸ்தாபனங்களை ஏற்படுத்த வேண்டியதிருக்க, இங்கிலாந்திலிருந்த ஸ்தாபனத்தையும்கூடப் பொருட்செலவினதென்றும் பயனற்றதென்றும் நாம் எடுத்துவிட்டது ஒரு பெரும்பிழையாகும். 

தேசாபிமானமும் சகல திறமைகளும் சேர்ந்து முதிர்ந்த நம் தேச பக்தர்களிற் சிலர் இங்கிலாந்து முதலிய தேசங்களில் நிலையாகத் தங்கி நமது நோக்கங்களைப் பிரச்சாரம் செய்வதற்குரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்தி வேலைகள் செய்துவரும்படியாக நமது காங்கிரஸ் ஏற்பாடு செய்தல் வேண்டும். செலவுக்குறைவு முதலியவற்றைக் கவனித்துத் தகுதியில்லாதாரை அந்த அயல்நாட்டு ஸ்தாபனங்களின் தலைவர்களாக நாம் அனுப்புவோமாயின், ‘அது கடைமுறை தான் சாம் துயரம் தரும்’. ஆதலால், அதற்குச் சகல வகைகளிலும் தகுதி வாய்ந்த இந்திய தேசாபிமானிகளைத் தெரிந்தெடுத்து அனுப்புதல் நமது கடமையாகும்.

ஒற்றுமைக்குரிய வழிகள்

நம் தேசத்தார்களில் ஒவ்வொருவரும் தம்தம் மதக் கோட்பாடுகளும் ஜாதிக் கோட்பாடுகளும் பிறர் மதக் கோட்பாடுகளையும் ஜாதிக் கோட்பாடுகளையும், பாதிக்காதவாறு திருத்திக் கொள்ளுதல் வேண்டும்.  ஹிந்து மதமும் முகம்மதிய மதமும் முரண்படுகிற கோட்பாடுகளில் முக்கியமானவை இரண்டு. அவையாவன : 

(1) முகம்மதியர் பக்ரீத் முதலிய பண்டிகைகளில் ஹிந்துக்கள் பார்த்து மனம் வருந்தும்படியாகப் பசுக்களைக் கொல்லுதல்

 (2) பள்ளி வாசல்களில் தொழுது கொண்டிருக்கிற முகம்மதியருடைய மனம் கலையும்படியான விதத்தில் ஹிந்துக்களுடைய ஊர்கோலங்களை மேள வாத்தியங்களுடன் பள்ளிவாசல்களின் பக்கத்து வீதிவழியாகக் கொண்டு போதல், பூரண தேசாபிமானமுடைய இரு மதத் தலைவர்களும் ஒன்றுகூடி ‘கொடுத்து வாங்கல்’ (Give and take) என்னும் கொள்கையை உபயோகப் படுத்தி இம்முரண்பாட்டுக் கோட்பாடுகளைத் திருத்திக் கொள்ளுதல் நமது ஒற்றுமைக்கு முதல் வழியாகும். 

ஹிந்துக்களுள் ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோரும் ‘தாழ்ந்த ஜாதியார்’ என்னப்படுவோரும் முரண்படுகிற கோட்பாடுகளில் முக்கிய மானவை இரண்டு. அவையாவன :

1. ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் தம்மைப் பன்றி முதலிய அசுத்தப் பிராணிகள் நெருங்கும் அளவுகூடத் ‘தாழ்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் நெருங்கவிடாமை.

2. தாழ்ந்த ஜாதியார் என்னப்படுவோர் உயர்ந்த ஜாதியார் என்னப் படுவோருடன் சமபந்தி போஜனம் செய்ய விரும்புதல்.

3. பூரண மனித அறிவையுடைய இவ்விருவகை ஜாதித் தலைவர்கள் சிலர் ஒன்று கூடிக் ‘கொடுத்து வாங்கல்’ என்னும் கொள்கையை உபயோகப்படுத்தி இம்முரண்பாட்டுக் கோட்பாடுகளைத் திருத்திக் கொள்ளுதல் நமது ஒற்றுமைக்கு இரண்டாவது வழியாகும். ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’, ‘நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லலளவல்லாற் பொருளில்லை’ என்னும் முன்னோர் மொழிகளையும், ‘தாழ்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் ‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும் கீழல்லர் கீழலல்லவர்’ என்னும் முன்னோர் மொழியையும் உட்கொண்டு சமாதானம் ஆவதற்கு முயற்சிப்பார்களாக.

இந்தியர்களுக்கெல்லாம் பொது உடைமைகள் இன்னின்னவை என்றும், இந்தியன் ஒவ்வொருவனுக்கும் தனியுடைமைகள் இன்னின்னவை என்றும், நாம் எல்லோரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். பொது உடைமைகளில் இந்தியர்கள் எல்லார்க்கும் சமவுரிமை உண்டு. தனியுடைமைகளில் அவற்றின் சொந்தக் காரருக்கு மாத்திரம் தனியுரிமை உண்டு. கல்வி, ஒழுக்கம், கடவுள் வழிபாடு, ஆற்றுநீர், ஏரிநீர், பெரும்பாட்டை, பொதுக் கூட்டுறவு, காட்டில் வாழும் உயிர்கள், இராஜாங்க உத்தியோகங்கள் முதலியன பொது உடைமைகள். ஒருவனுடைய செல்வம், குளத்து நீர், கிணற்று நீர், நடைபாதை, வீடு, வீட்டில் வாழும் உயிர்கள், சொந்த வேலைகள் முதலியன தனி உடைமைகள். 

பொது உடைமைகளில் யாவர்க்கும் சம உரிமை யுண்டாதலால், அவற்றை ஒருவன் அனுபவித்தலை மற்றொருவன் தடுக்கலாகாது. 

தனியுடைமைகளில் அவற்றின் சொந்தக்காரருக்கு மாத்திரம் தனியுரிமை உண்டாதலால், அவற்றை அவர் தவிர வேறொருவன் அநுபவிக்க முற்படலாகாது. 

இவற்றை ஆதாரமாகக் கொண்டு இந்தியர்களுக்கெல்லாம் பொது உடைமைகள் இன்னின்னவையயன்றும், இந்தியன் ஒவ்வொருவனுக்கும் தனியுடைமைகள் இன்னின்னவை யென்றும், நம் தேசத்துப் பல ஜாதித் தலைவர்களும் ஒன்று கூடிப் பேசி ஆலோசனை செய்துவரையறுத்து முடிவு செய்தலே நமது ஒற்றுமைக்கு மூன்றாவது வழியாகும்.

இவ்வுண்மையை அறியாது நம்மில் அறிவாளிகளாயுள்ளவர்களும் கூட நமது தேசத்தில் நிலவும் ஜாதி வேற்றுமையொன்றே நமது ஒற்றுமை யின்மைக்குக் காரணம் என்று கூறுகின்றனர். அவ்வொன்றே காரண மென்பது சரியன்று. 

இப்பொழுது நமது தேசத்தில் பிறப்பை ஆதாரமாகக் கொண்டு  நிலவும் அநீதியான ஜாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டுவது அவசியம்தான். அது விரைவில் ஒழியுமா? என்பது மற்றொரு வினா. 

அது ஒழிந்த பின் அதற்குப் பதிலாக வேறொன்றை ஆதாரமாகக் கொண்டு ஜாதி வேற்றுமைகள் உண்டாகவா? என்பது மற்றொரு வினா. 

இவ்வினாக்களுக்கு விடைகள் பின்னர்க் கூறுகின்றேன். 

நமது ஒற்றுமையின்மைக்கு முக்கிய காரணம் நமது பொதுவுடைமைகள் இன்னின்னவையயன்றும் தனி யுடைமைகள் தனியுடைமைகள் இன்னின்னவையயன்றும் அறியாது சிலர் பொதுவுடைமைகளிற் சிலவற்றைத் தமது தனியுடைமைகள் என்று கொண்டு அவ்வுடைமைகளில் மற்றவர்களுக்குள்ள சமவுரிமையைக் கொடுக்க மறுக்கின்றனர். 

வேறு சிலர் தனியுடைமைகளில் சிலவற்றைப் பொது வுடைமைகள் என்று கருதி, அவ்வுடைமைகளிற் சமவுரிமை கொண்டாட முற்படுகின்றனர்.

பொதுவுடைமைகளில் சமவுரிமையை மறுப்பதற்கு உதாரணம் -ஓர் ஊர் ஜனங்களுடைய பொது நன்மைக்காக இராஜங்கத்தார் அல்லது ஸ்தலஸ்தாபனத்தார், அவ்வூரில் ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் வசிக்கும் வீடுகளுக்குச் சமீபமாயுள்ள பொது இடத்தில் ஒரு குளமோ, கிணறோ வெட்டுகின்றனர். தங்கள் வீடுகளுக்குச் சமீபமாயிருக்கின்ற காரணத்தால் அவ்வுயர்ந்த ஜாதியார் என்னப்படுவோர் அதில் மற்றை ஜாதியார்கள் குளிக்கக் கூடாது. குடிதண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்லி அதில் மற்றை ஜாதியர்களுக்குள்ள சமவுரிமையை மறுக்கின்றனர். அதனால் அந்த ஊரில் அவ்வுயர்ந்த ஜாதியார் என்னப்படுவோருக்கும் மற்றை ஜாதியார்களுக்கும் ஒற்றுமையின்மையும், பகைமையும் உண்டாகின்றன.

தனியுடைமைகளில் சமவுரிமை கொண்டாடுவதற்கு உதாரணம் :

ஓர் ஊரில் உயர்ந்த ஜாதியார் என்னப்படும் சில ஜாதியார்கள் சேர்ந்து தங்களுக்குள் வரிவிதித்துப் பணம் சேகரித்துத் தங்கள் ஜாதியார்களுடைய சொந்தத் தனி உபயோக்திற்காகத் தாழ்ந்த ஜாதியார்கள் என்னப்படுவோர்கள் அதில் குளிக்க வேண்டும். குடிதண்ணீர் எடுக்க வேண்டும் என்று சொல்லித் தனியுரிமை கொண்டாட முற்படுகின்றார்கள். அவர்கள் செயலை அக்குளத்தின், அல்லது கிணற்றின், சொந்தக்காரர்களான ஜாதியார்கள் தடுக்கின்றார்கள். அதனால் அவ்வுயர்ந்த ஜாதியார் என்னப்படுவோருக்கும் அத்தாழ்ந்த ஜாதியார் என்னப்படுவோருக்கும் ஒற்றுமையின்மையும், பகைமையும் உண்டாகின்றன.

இவ்வுதாரணங்களால் நம் தேசத்தின் சில ஜாதியார்களுள் உண்டா யிருக்கிற ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்கும் முக்கிய காரணம் பிறப்பை ஆதாரமாகக் கொண்டுள்ள அநீதியான ஜாதி வேற்றுமையும் உயர்வு, தாழ்வும் மாத்திரம் அல்ல ; பொதுவுடைமைகளில் சிலர் மற்றவர்களுக்குரிய சமவுரிமையைக் கொடுக்க மறுத்தலும், தனியுடைமைகளில் அவற்றின் சொந்தக்காரர் அல்லாத சிலர் சமஉரிமை கொண்டாட முற்படுதலுமாம் என்பது தெளிவாக விளங்கும்.

ஓர் உடைமை பொதுவுடைமையா, தனியுடைமையா என்று தீர்மானிப்பதற்குத் தக்க சான்று இல்லையாயின், அவ்வுடைமையைப் பொது உடைமை என்றே தீர்மானித்துவிடலாம்.

ஒற்றுமை நிமித்தமாகத் தனி யுடைமைகளிற் சிலவற்றைப் பொதுவுடைமைகளாக இந்தியர்களெல்லாம் அநுபவிக்கும்படி விட்டுவிடலாம். இவ்வாறாக நமக்குள் ஒற்றுமையை உண்டுபண்ணி வளர்த்தல் இன்றியமையாதது.

‘தென் இந்தியா நலவுரிமை சங்கத்தார்’ சென்ற பல வரு­ங்களாக வேண்டுகின்ற ‘வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம்’ நமது பொதுவுடைமைகளில் முக்கியமான சிலவற்றை விளக்கிக்காட்டி நமக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமை யின்மையையும் பகைமையையும் குறைக்க வல்லது. அது காரணத்தால் அவ் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை’ப் பற்றிச் சில இங்குக் கூறுகின்றேன்.

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல்-4

 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

இராஜாங்க உத்தியோகங்களையும், சட்டசபை, ஜில்லா நிர்வாக சபை (District Board) முதலிய ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களையும் காங்கிரஸ் மகாசபை, அதன் கிளைச் சபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங் களையும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாரும் அவரவர் ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து பற்றிக் கொள்ளுதலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், அதாவது மேற்கூறிய உத்தியோகங்களையும், அவற்றின் அதிகாரம், சம்பளம், செல்வாக்கு முதலியவற்றையும் ஒவ்வொரு ஜாதியாரின்  எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து அந்தந்த ஜாதியார் அடையும்படிசெய்தல், (உத்தியோக மென்பது சம்பள உத்தியோகமும், கெளரவ உத்தியோகமுமாம்).

இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகாதென்று தேசாபிமானத்திலும், அறிவிலும், சிறந்தவராயுள்ள சிலர் கூறுகின்றனர். அதற்கு அவர் கூறும் காரணங்களாவன : 

1) வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நமது தேசத்தில் நிலவும் படி செய்துவிட்டால் ஜாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வும் தாழ்வும் நமது தேசத்தில் நிலைத்துப்போம் ; அதுபற்றி நமது தேசத்தில் ஒற்றுமையின்மையும் பகைமையும் நிலைத்துப்போம். 

2) உத்தியோக வி­யத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கவனிப்பதா யிருந்தால், சில உத்தியோகங் களுக்குத் தகுதியில்லாதாரை நியமிக்கும்படியான நிலைமை ஏற்படும். 

3) நம் தேசத்திலுள்ள ஜாதிகள் பல ; ஒவ்வொரு ஜாதியையும் சேர்ந்தவர்கள் மிகப்பலர். உத்தியோகங்களோ மிகச் சில. அச்சிலவற்றை அம்மிகப் பலர்க்குப் பகிர்ந்து கொடுப்பது எப்படி?

இம்மூன்று காரணங்களும் யுக்திக்கு அனுபவத்திற்கும் பொருந்தாதவை. இப்பொழுது நமது தேசத்திலுள்ள ஜாதி வேற்றுமைகள் எப்பொழுது ஒழியும்? பிறப்பை ஆதாரமாகக் கொண்டு தற்காலம் நமத தேசத்தில் நிலவும் அநீதியான ஜாதி வேற்றுமைகளும், அந்த ஜாதிகளில் ஒன்று உயர்வு. மற்றொன்று தாழ்வு என்னும் அநீதியான கோட்பாடும் ஒருகால் ஒழியக்கூடும். அவை ஒழிந்த பின்னர் நல்லொழுக்கம், தவம், கல்வி, தொழில், செல்வம் முதலியவற்றில் ஒன்றை, அல்லது சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு ஜாதி வேற்றுமைகள் உண்டாகவா? நல்ல ஒழுக்கம், தவம், கல்வி, செல்வம், நற்றொழில் முதலிய நல்லவற்றை உடையோர் மேலான ஜாதியார் என்றும் தீய ஒழுக்கம், தவமின்மை, கல்வியின்மை, செல்வமின்மை, தீத்தொழில் முதலியவற்றை உடையோர் கீழான ஜாதியார் என்றும் கருதப்படமாட்டாரா?

‘ஒண்பொருள் ஒன்றே தவம் கல்வி ஆள்வினை, என்றிவற்றான் ஆகும் குலம்’ என்னும் நாலடியார் வாக்கும், ஒழுக்கம் உடைமை குடிமை ; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரோ டேனையவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்னும் பொய்யாமொழிப் புலவர் வாக்குகளும் பொய்க்குமா? அவை பொய்க்கும் எனினும் மனிதர் மேம்படுவதற்கு ஒழுக்கம் முதலியவை பற்றி உயர்வு, தாழ்வு கற்பித்தல் அவசியம் அன்றோ?  (Unity in Variety) என்றபடி வேற்றுமைகளுள் ஒற்றுமை காண்டலன்றா அறிவு? வேற்றுமை இல்லையயனின், ஒற்றுமையயன்ப தொன்றுடோ? இக்காரணங்களால் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட ஜாதி வேற்றுமைகளும், அது பற்றிய உயர்வு தாழ்வுகளும் ஒழிதலை அறிவுடை யோர் விரும்புவரே தவிர, ஒழுக்கம் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்ட ஜாதி வேற்றுமைகளாவது, அது பற்றிய உயர்வு தாழ்வுகளாவது, ஒழிதலை அறிவுடையோர் விரும்பார்.

ஜாதி வேற்றுமை என்று யான் கூறுங்கால், மனிதர்கள் நிற்கும் நிலைமைகளைப் பற்றிய வேற்றுமை என்றே கொள்க. உயர்வு தாழ்வு என்று யான் கூறுங்கால், பிறரால் மதிக்கப்படும் தன்மையைப் பற்றிய உயர்வு, தாழ்வு என்றே கொள்க. மனிதர்களிற் சிலர் அவருடைய நல்ல ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி உயர்வாகவும் மதிக்கப்படுவதென்று யான் கூறினும் பொது உடமைகளிலும் பொது இடங்களிலும் அவரெல்லாருக்கும் சம உரிமையும் சம இருப்பும் கொடுக்கப்பட வேண்டுமென்றே கூறுகின்றேன். ஆனால் தனி உடமைகளிலும் தனி இடங்களிலும் அவற்றின் சொந்தக்காரர் விருப்பம் போல் நல்ல ஒழுக்கம் முதலியவற்றை உடையவர்க்கும் தீய ஒழுக்கம் முதலியவற்றை உடையவர்க்கும் முறையே உயர்ந்த உரிமையும் இருப்பும் தாழ்ந்த உரிமையும் இருப்பும் கொடுக்கப்படலாம்.

உதாரணமாக, இராசாங்கத்தாரால் அல்லது ஸ்தல சொந்த ஸ்தாபனங்களால் ஏற்படுத்தப்பட்ட கலாசாலைகள், சத்திரங்கள், புகை வண்டிகள் அவற்றின் உணவு சாலைகள் முதலியவற்றில் எல்லா ஜாதியார்களும் சம இருப்பும் சம பந்தி போஜனமும் கொடுக்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் அவற்றை அடைய உரிமை உடையவர்கள். 

ஒருவரால் அல்லது ஒரு ஜாதியாரால் அல்லது சில ஜாதியார்களால் முறையே அவருடைய அல்லது அந்த ஜாதியாருடைய அல்லது அந்த சில ஜாதியார்களுடைய உபயோகத்திற்காக மாத்திரம் ஏற்படுத்தப்பட்ட கலாசாலைகள், சத்திரங்கள் முதலியவற்றில் அவற்றை ஏற்படுத்தியவர் இஷ்டப்படி சில ஜாதியாருக்குச் சம இருப்பும் சமபந்தி போஜனமும் வேறு சில ஜாதியாருக்குத் தாழ்ந்த இருப்பும் தனிப்பந்தி போஜனமும் கொடுக்கப்படலாம். தாழ்ந்த இருப்பையும் தனிப்பந்தி போஜனத்தையும் வேண்டாதார் அம்‘மதியாதார் வாசல் வழி மிதிக்க வேண்டா’. அதுபற்றி அவரோடு பகைமை கொண்டுதல் தகுதியன்று. ஒரே தாய் தந்தை பெற்ற மக்களில் ஒருவர்க்கு உயர்ந்த இருப்பும் போஜனமும் கொடுக்கப் படுகின்றன வாகலான்.

ஒருவருடைய அல்லது ஒரு சிலருடைய சொந்தக்காரியங்களில் அவருடைய, அல்லது அச்சிலருடைய, இஷ்டப்படி அவர் அல்லது அச்சிலர், நடந்து கொள்ளும்படியாக மற்றவர்கள் விட்டுவிடுதலே முறையாகும். அவருடைய சொந்தக் காரியங்களில் மற்றவர்களது இஷ்டப்படி அவர் நடக்க வேண்டுமென்பது முறை அன்று. 

ஒருவருடைய சொந்தக் காரியங்களிலும் அவர் மற்றவர்களது இஷ்டப்படி நடக்க வேண்டுமென்றால் அவர் தம் சுதந்திரம் சுவாதீனம் முதலியவற்றை இழந்து மற்றவர்களுக்கு அடிமையாய் வாழ வேண்டியதாகவே ஏற்படும். அப்போது அவருடைய உடல், பொருள், உயிர், மனைவி, மக்கள் எல்லாம் மற்றவர்களுடைய சொந்த உடைமைகளாக விட்டுவிட வேண்டிய நிலைமையும் ஏற்படக்கூடும். அதனால் பெருங்குழப்பம் ஏற்பட்டுத் தேசத்தார்களுள் போர் நிகழவும் கூடும்.

உலகத்திலும் அதன் ஒரு பாகமாகிய நம் தேசத்திலும், சரியான ஒன்றையோ, தப்பான ஒன்றையோ ஆதாரமாகக் கொண்டு ஜாதி வேற்றுமை களும், அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளும், எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். அவற்றை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுதலும், அவற்றை ஒழிப்பதற்கு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ தடையயன்று சொல்லுதலும் ஆழ்ந்து ஆலோசியாமல் மேலெழுந்த வாரியாகச் சொல்லுதலாம். நாம் வேண்டுவது நம் தேசத்தவருள் நித்தியமாக நிலவும் ஒற்றுமையே. அவ்வொற்றுமைக்கு ஜாதி வேற்றுமை ஒழிவும், அது பற்றிய உயர்வு தாழ்வு ஒழிவும் அவசியம் என்று சிலர் சொல்லி வருகிறபடியால் அவ்விரண்டின் ஒழிவையும் நம்மில் சிலர் விரும்புகின்றனர். அவற்றின் ஒழிவு அவசியம் என்று அச்சிலர் கூறுவதற்குக் காரணம், தற்காலம் நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான ஜாதி வேற்றுமைகளும் அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளுமே.

ஆனால், உயர்வு தாழ்வு இல்லாத ஒரே ஜாதியாருள்ளும், ஒரே குடும்பத்தினருள்ளும், ஒற்றுமையின்மையும், பகைமையும் கொலை முதலியனவும் நிகழக் காண்கின்றோம். 

இதன்றியும், தம் ஜாதி உயர் வென்றும், பிறர் ஜாதி தாழ்வென்றும் கருதும் இதுவேறு ஜாதியார், சிலர் ஒற்றுமைப்பட்ட அத்தியந்த நண்பர்களாக வாழ்கின்றதையும் காண்கின் றோம். இக்காட்சியால் நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, பகைமை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் ஜாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வு தாழ்வும் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கத் தக்கது. ஆயின், நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, முதலிய வற்றிற்கு முக்கியமான காரணம் யாதோ? எனின், நம் தேசத்து இராஜாங்க உத்தியோகங்களிலும், சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங் களிலும், காங்கிரஸ் மகாசபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமையே. இவ்வுண்மையை ஓர் உதாரண முகத்தால் விளக்குகின்றேன்.

ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் பத்துப்பேர்கள் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும், கர்ணம் உத்தியோகம் ஒன்றும் கிராம முன்சீபு உத்தியோகம் ஒன்றும் இருக்கின்றன. சகோதரர் பதின்மரில் வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த இருவர், கர்ணம் உத்தியோகத்தை ஒருவரும், கிராம முனிசீபு உத்தியோகத்தை மற்றொருவருமாகக் கொண்டு அவற்றின் சம்பளங்களைப் பெற்றும் குடும்ப நிலங்களை எல்லாம் மற்றைச் சகோதரர்கள் எண்மரைக் கொண்டு பயிரிடுவித்து விளை பொருள்களை அடைந்தும், அவற்றைத் தம் இஷ்டப்படி தமது மனைவி மக்களின் சுக வாழ்க்கைக்கு உபயோகித்துக் கொண்டும் மற்றைச் சகோதரர்கள் எண்மரும் அவர்கள் மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்கக் திண்டாடும்படி விட்டுக் கொண்டும் இருக்கின்றனர். வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த அவ்விரு சகோதரரும் கர்ணம், கிராம முனிசீபு உத்தியோக அதிகாரம், சம்பளம், செல்வாக்கு, குடும்ப நிலங்களின் ஊதியம் முதலியவற்றை அநுபவிக் கின்றதையும், தாமும் தமது மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்குத் திண்டாடுகின்றதையும், மற்றைச் சகோதரர் எண்மரும் கவனித்தார்கள்.

உடனே அவர்கள் எண்மரும் முந்திய இருவரையும் பார்த்துக் ‘கர்ணம் கிராம முனிசீபு உத்தியோகங்கள் குடும்பத்துக்குப் பொதுவான உத்தியோகங் கள் : ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும் குடும்பத்துக்குப் பொதுவான நிலங்கள். 

அவ்விரு உத்தியோகங்களையும் நிலங்களையும் சமமாகப் பத்துப்பங்கு வைத்துப் பிரித்து அநுபவிப்போம்’ என்று கூறுகின்றனர். முந்திய சகோதரர் இருவரும் மற்றச் சகோதரர் எண்மரையும் பார்த்து, ‘நமது உத்தியோகங்களையும் சொத்துக்களையும் நாம்பிரிவினை செய்து கொண்டால், நமக்கு ஒற்றுமையின்மை ஏற்பட்டுவிடும். கர்ணம் உத்தியோகத்தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும், வகிக்க நீங்கள் தகுதி இல்லாதவர்கள். அன்றியும் இரண்டு உத்தியோகங்களைப் பத்துப்பேர்கள் பகிர்ந்து கொள்வதெப்படி? உத்தியோக அதிகாரமும் செல்வாக்கும் இல்லாதவர்கள் சொத்துக்களைச் சரியாகப் பரிபாலித்தல் முடியாது. ஆதலால் நம் குடும்ப உத்தியோகங்களையும் சொத்துக்களையும் பிரிக்க வேண்டா’ என்று சொல்லுகின்றனர்.

மற்றை எண்மரும் ‘நாங்கள் ஒவ்வொருவரும் கர்ணம் உத்தியோகத் தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும் வகித்துப பார்த்தால்தானே நாங்கள் அவற்றிற்குத் தகுதியுடையவராவோம். இரண்டு உத்தியோகங் களைப் பத்துப் பங்க வைப்பதெப்படி யயன்றால், ஒவ்வொருவர் ஒவ்வொரு வரு­மாக அவ்வுத்தியோகங்களைப் பார்த்து அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை அடைவோம். நன்செய் புன்செய்களைச் சம பாகமாகப் பிரித்துக் கொள்வோம் என்று கூறுகின்றனர்.

கணவான்களே! உத்தியோகங்களையும், குடும்பச்சொத்துக்களையும் சமமாகப் பிரித்துக் கொள்வதால் அச்சகோதர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அல்லது உத்தியோகங்களையும், சொத்துக்களையும் பிரித்துக் கொள்ளாமல் முந்திய சகோதரர் இருவரும் மாத்திரம் அவற்றின் ஊதியங்களை அடைந்து அநுபவிப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வுத்தியோகங் களையும் சொத்துக்களையும் சமபாகமாகப் பிரித்துக் கொள்வதே அச் சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமை நிலவுவதற்கு வழியயன்பதும், அவை பிரிக்கப்படாதிருத்தல் அச்சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமையின்மையும் பகைமையும் வளர்வதற்கு வழி என்பதும் பள்ளிச் சிறார்க்கும் தெள்ளென விளங்கத்தக்கவை.

இனி, சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், காங்கிரஸ் சபை முதலிய பொது ஸ்தாபனங்களும் வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையை அந்தந்த வகுப்பினர்களே உடையவர்களா யிருத்தல் வேண்டும். ஆனால், சிலர் அப்பிரதிநிதிகளும் கலப்புத் தொகுதிகளால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்தப்படுமானால் ஜாதி வேற்றுமைகள் இன்னும் வளருமென்றும் கூறுகின்றனர். 

வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்துவதானால் ஜாதி வேற்றுமைகள் வளரப்போவதில்லை. அவை வளர்ந்தாலும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ஜாதியாயிருந்தாலும் கூட, அதனால் நம் தேசத்திற்குக் கேடு ஒன்றும் உண்டாகப் போவதில்லை. நாம் வேண்டுவதெல்லாம் ஒற்றுமை யொன்றே. வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதியாக வாக்காளர்கள் (வோட்டர்கள்) ஏற்படுத்தப்பட வில்லையானால், வகுப்புவாரிப பிரதிநிதித்துவம்  பொய்ப்பேச்சாகிப் பழையபடி நமக்குள் ஒற்றுமையின்மையும், பகைமையும், சண்டையும்தான் வளர்ந்து கொண்டிருக்கும்.

 நமக்குள் ஒற்றுமையை உண்டாக்கி வளர்ப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகுப்புவாரி வோட்டர்த் தொகுதிகள் இன்றியமையாதவை. ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த வகுப்பிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்பாலரையும், பெண் பாலரையும் வாக்காளர்களாக ஏற்படுத்துவதற்கு வேண்டுவன செய்யும்படிக்கும் தேசாபிமானச் சகோதர்களையயல்லாம் பிரார்த்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆதலால், நம் தேசத்தாருள் ஒற்றுமை ஏற்படுவதற்கு நமது இராஜாங்க உத்தியோகங்களிலும், ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நிலவும்படி செய்தலே உண்மைத் தேசாபிமானி ஒவ்வொருவருடைய கடமையுமாகும். 

இவ்வுண்மையை அறிந்தே நம் தலைவர்கள் காங்கிரஸ் மகாசபையின் உத்தியோகம் முதலியவற்றைப் பற்றிய விதிகளில் முகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தாபனங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்றும், தாழ்ந்த வகுப்பினரென்போர்களுக்கு இத்தனை ஸ்தானங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வரையறுத்துத் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

உண்மை இவ்வாறிருக்க, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒற்றுமை யின்மையை உண்டுபண்ணும் என்பவரைப் பற்றி யான் என்ன கூறுவேன்? அவர் உண்மையை உணராதவரென்று கூறவோ, ஒற்றுமையை நாடாதவரென்று கூறவோ, காங்கிரஸ் மகாசபை விதிகளின் கருத்துப்படி நடக்காதவரென்று கூறவோ என் மனம் துணியவில்லை. 

ஆதலால் அவரைப் பற்றி யான் குறையயான்றும் கூறாமலே, அவர் இனிமேலாயினும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் மேற்கூறிய உத்தியோகங்களிலும், மற்றைப் பொது உடைமைப் பரிபாலனங்களிலும் நிலவும்படி செய்து நமக்குள் தற்காலம் நிலவா நின்ற ஒற்றுமையின்மை, பகைமை முதலியவற்றை நீக்கி ஒற்றுமையை உண்டாக்கி வளர்க்கும்படியாகப் பிரார்த்தித்து வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

இராஜாங்க உத்தியோகங்கள்

சட்டசபை, நகர பரிபாலன சபை, ஜில்லா நிர்வாக சபை, தாலுகா நிர்வாக சபை முதலியவற்றின் அங்கத்தினர் ஸ்தாபனங்களைத் தேச பக்தர்கள் ஏற்றுக் கொள்ளலாமென்று இப்போது நமது தலைவர்களெல்லாம் ஒரு மனதாகச் சொல்லிவிட்டபடியாலும் அந்த ஸ்தானங்களை நம் தேச பக்தர்கள் இப்போது ஏற்றுக் கொண்டு வருகிறபடியாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளுத லின் ஆவசியகத்தைப் பற்றி யான் ஒன்றும் கூறவேண்டுவதில்லை. ஆனால் இராஜாங்க உத்தியோகங்களைத் தேச பக்தர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடா தென்று நம் தலைவர்களில் சிலர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக் கின்றனர். இராஜாங்க உத்தியோகங்களைத் தேசபக்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால், தேசபக்தரல்லாதார்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கின்றார்கள். 

அவ்வுத்தியோகங்களைத் தேசபக்தர்கள் ஏற்றுக் கொண்டால், அவற்றின் அதிகாரம், செல்வாக்கு, சம்பளம் முதலியவற்றை அவர்களுடைய சொந்த குடும்ப நன்மைக்கும், தேச தீமைக்கும் அவர்கள் உபயோகிப்பார்கள்.

இராஜாங்க உத்தியோகங்களை நம் தேசத்தார்களில் எவருமே ஏற்றுக் கொள்ளாமலிருக்கும்படி செய்துவிடலாமென்று சிலர் கூறுகின்றனர். அது அசாத்தியமான காரியம், அதிகாரத்தையும், செல்வாக்கையும், பொருளை யும் விரும்பாதவர்கள் இவ்வுலகத்தில் இல்லையாகலான் ; உணவு, உடை முதலியவற்றையும் மனைவி, மக்கள் முதலியவர்களையும் விரும்புகிறவர் களெல்லாம் இராஜாங்க உத்தியோகங்களையும், அவற்றின் அதிகாரம், செல்வாக்கு, சம்பளம் முதலியவற்றையும் விரும்புவார்களென்பது வெள்ளிடை மலை போல் விளங்கத்தக்கது. ஆதலால், இராஜாங்க உத்தியோகங்கள் வேண்டா என்னும் வெறும் பேச்சை விட்டுவிட்டு நாம் இராஜாங்க உத்தியோகங்கள் எல்லாவற்றையும் அடையும்படியான மார்க்கத்தில் செல்வோமாக. இராஜாங்கத்தோடு கோபித்துக் கொண்டு இராஜாங்க உத்தியோகங்கள் வேண்டா என்றால், குளத்தோடு கோபித்துக் கொண்டு குளியாமல் போதலை ஒக்கும். அதனால் இராஜாங்கத்தார் நஷ்டம் அடையப் போவதில்லை. நாம்தான் நஷ்டம் அடைவோம்.

சுய அரசாட்சி என்பதுதான் யாது? நாம் நம் தேசத்தை ஆளுதல்தானே? கவர்னர் உத்தியோகம் முதற்கொண்டு, வெட்டியான் உத்தியோகம் வரையிலுள்ள சகல உத்தியோகங்களையும் நம் தேசத்தார்களே வகிப்பார்களாயின், நம் தேசத்தார்களே நம் தேசத்தை ஆள்பவர்களா கின்றார்கள் என்பதில் என்ன தடை?

கல்வி, அறிவு, தேசாபிமானம், இராஜீய ஞானம் முதலியவை நிறைந்து விளங்கிய ஸ்ரீதிலகர், நம் தேச அரசாட்சி சம்பந்தமான சகல உத்தியோகங் களையும் நம் தேசத்தார்கள் அடைதலே நாம் சுய அரசாட்சி அடைதலாகு மென்று அவர் ஆயுள்காலமெல்லாம் கூறிவந்தார். இராஜீய வி­யங்களில் அவரைப் பின்பற்றுகிற யானும் அதனையே கூறுகின்றேன். நம் தேசத்தின் மாகாணத்தின் கவர்னராக நமது லார்டு சின்னா நியமிக்கப்படவில்லையா? அவ்வாறு நம் தேசத்தின் பல மாகாணங்களுக்கும் லார்டுகளான பல இந்தியர்கள் கவர்னராக நியமிக்கப்படுவார்களாயின், நம் தேச அரசாட்சியை நாம் அடைந்துவிட்டோமென்பதில் என்ன ஐயமுளது? அவ்வாறு நம் தேசத்து எல்லா மாகாணங்களுக்கும் இந்தியர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படுவார் களா என்று சிலர் வினவலாம். லார்டு சின்னா கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு காரணம் யாது? அப்போது தேசத்தலைவர்களுள் காணப்பட்ட ஒற்றுமை யன்றோ? லார்டு சின்னா உத்தியோகத்தை விட்டதற்கக் காரணம் யாது? அப்போது தேசத் தலைவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மை யன்றோ நம் தேசத் தலைவர்கள் எல்லாருள்ளும் பூரண ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதென்று நம்மை ஆள்வோர் எந்த நிமி­ம் காண்பரோ, அந்த நிமி­மே நமது தேசத்தின் பல மாகாணங்களும் நம்மவர்களையே கவர்னர்களாக நியமித்து நமது தேசத்தை நாமே ஆளும்படி செய்துவிடுவர் என்பது நிச்சயம்.

இராஜாங்க உத்தியோகங்களைக் கொடுப்போர்கள் இராஜாங்க அதிகாரி களாயிருக்கும் போது, இராஜாங்க உத்தியோகங்களில் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ நிலவும்படி நாம் செய்வது எப்படி என்று சிலர் வினவுகின்றனர்.

ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், பொது ஸ்தாபன உத்தியோகங் களிலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியாக நிலவும்படி நாம் செய்து விட்டோமென்றால், இராஜாங்க உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியாக நிலவும்படி நம் இராஜாங்க அதிகாரிகள் செய்து விடுவார்கள். இராஜாங்க உத்தியோகங்களிற் பெரும்பாலானவற்றைத் தற்காலம் ஒன்றிரண்டு ஜாதியார்கள் மாத்திரம் கைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுத்தியோகங்களை நம் தேசத்திலுள்ள எல்லா ஜாதியார்களுக்கும் பகிர்ந்துகொடுப்பது எவ்வாறென்று சிலர் வினவுகின்றனர். கவர்ன்மென்ட் அதிகாரிகள் ஒன்று செய்ய வேண்டுமென்று நினைப்பார்களாயின், அவர்கள் அதனை எப்படியும் செய்து முடித்துவிடுவார்கள். 

அதற்குரிய வழிகளெல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 

இப்பொழுதுள்ள இராஜாங்க உத்தியோகங்களில் எந்தெந்த ஜாதியார்களுக்கு எத்தனை எத்தனை கொடுக்கப்பட வேண்டுமென்று கணக்கிடப்படுகிறதோ, அந்தக் கணக்குப்படி அந்தந்த ஜாதியார்கள் அத்தனை அத்தனை உத்தியோகங்கள் அடையும் வரையில் காலியாகும் உத்தியோகங்களுக்கு வேறு ஜாதியார்கள் நியமிக்கப்படக் கூடாதென்று கவர்ன்மென்ட் உத்தரவு (G.O.)  ஒன்று பிறப்பித்து ஊர்ஜிதத்திற்குக் கொண்டுவந்துவிடுவார்கள். ஆனால் இவ்வுத்தரவு நாம் விரும்பும் பலனை விரைவில் அளிக்கமாட்டாது. மற்றை ஜாதியார்களுக்காக என்னென்ன உத்தியோகங்களில் எத்தனை எத்தனை கொடுக்கப்பட வேண்டுமென்று கணக்கிடப்படுகின்றனவோ, அத்தனை உத்தியோகங்களையும் இராஜாங்கத்தார் உடனே காலி செய்விக்க வேண்டும். அதற்கு வரு­த்திற்கு மேற்பட்டு இன்னின் உத்தியோகங்களை வகிக்கின்றவர்கள் உடனே அவ்வுத்தியோகங்களை விட்டு ஓய்வுச் சம்பளம் வாங்கிக் கொண்டு விலகிவிட வேண்டுமென்றும், இத்தனை வரு­த்திற்குட்பட்டு இன்னின்ன உத்தியோகங்களை வகிக்கின்றவர்க ளெல்லாம் கவர்ன்மென்ட்டுக்குத் தேவையில்லையயன்றும் ஒரு சட்டம் (Bill) சட்டசபையிற் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அந்தச் சட்டப்படி முந்தியவர்களையும், பிந்தியவர் களையும் அவரவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டுக் காலியான அவ்வுத்தி யோகங்களை மற்றை ஜாதியார்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இராஜாங்க அதிகாரிகள் அவ்வாறு சட்டம் உண்டுபண்ண முற்பட வில்லையானால், சட்டசபையிலுள்ள நமது பிரதிநிதிகள் மூலமாக அவ்வாறான சட்டமொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும்படி செய்து அந்தச் சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவரும்படி கவர்ன்மென்ட் அதிகாரிகளை நாம் வற்புறுத்த வேண்டும்.