Monday

நிலையாமை

வீட்டியல்
அஃதாவது, முத்தியின் இயல்பு. இதுமுதல் முத்திக்கு நேர் நெறியாகிய ஞானத்தைக் கூறுகின்றார்.

முப்பத்தொன்றாம் அதிகாரம் - நிலையாமை.
அஃதாவது, (உலகப் பொருள்களின் )நிலையாத தன்மை.

நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (301)

பொருள்: நில்லாதவற்றை -(நிலையாக) நில்லாத பொருள்களை, நிலையின என்று உணரும் - நிலையுடையவை என்று அறியும், புல் அறிவு ஆண்மை -அற்ப அறிவை ஆளுதல், கடை -கடைப்பட்ட செயல் (ஆம்).

அகலம்: நிலையாக நில்லாத பொருள்கள், உலகப் பொருள்கள். கடைப்பட்ட செயலைக் கடை என்றார்.

கருத்து: நிலையில்லாத பொருள்களை நிலையின வென்று உணராதல் மடமை.

கூத்தாட் டவைகுழீஇ யற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று. (302)

பொருள்: பெரும் செல்வம் கூத்து ஆடு அவை குழீஅற்று - பெருஞ்செல்வம் (வருதல்) கூத்தாட்டு அவை கூடினாற் போலும்; போக்கும் அது விளிந்து அற்று‡ (பெருஞ் செல்வம்) போதலும் கூத்தாட்டு அவை (கூத்து முடிந்தவுடன்) போயினாற் போலும்.

அகலம்: குழுவி யற்று என்பது இன்னிசை நோக்கிக் குழீஇ யற்று என நின்றது. குழீஇயற்று, விளிந்தற்று என்பன வினையயச்சத் தொகைகள். அவை முறையே ‘குழீஇயினா லற்று’, ‘விளிந்தா லற்று’ என விரியும். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அவைக் குழாத் தற்றே’. அவைக் குழாத்தற்றே என்பது பொருத்தமான பொருள் தாராமையானும், பின்னர் விளிந்தற்று என வருதலானும், குழீஇயற்று என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: செல்வம் வருதலும் போதலும் கூத்தாட்டவை குழுவுதலும் போதலும் போலாம்.

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல். (303)

பொருள்: செல்வம் அற்கா(த) இயல்பிற்று - செல்வம் (நிலையாக) நில்லாத தன்மையை யுடைத்து ; அது பெற்றால் ஆங்கே அற்குப செயல் -(ஒருவன்) செல்வத்தைப் பெற்றால் (அதனைப் பெற்ற) அப்பொழுதே (நிலையாக ) நிற்கும் அறங்களைச் செய்க.

அகலம்: அற்குதல் ‡தங்குதல். நிலை பெறுதல்.

கருத்து: செல்வம் நிலை யில்லாதது. அது பெற்றால் உடனே அறஞ் செய்க.

நாளென வொன்று போற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (304)

பொருள்: நாள் என ஒன்று போல் காட்டி - நாள் என ஒரு பொருள் போல் தோற்றிக்கொண்டிருப்பது, உயிர் ஈரும் வாள் - உயிரை (உடம்பினின்று) பிரிக்கும் வாள், அஃது உணர்வார்ப் பெறின்‡நாள் என்பது அறிவுடையாரது ஆராய்ச்சி யைப் பெறுமாயின்.

அகலம்: காட்டி என்பது வழி காட்டி என்பது போல வினையா லணையும் பெயர். நாள் என ஒன்றுபோல் காட்டி என்றமையால், நாள் என்று ஒரு பொருள் இல்லை என்பதும், அது மனத்தின் கற்பனையே என்பதும் பெற்றாம். அஃது என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் தொக்கு நின்றது. உணர்வாரது ஆராய்ச்சியைப் பெறின் என்பதனை உணர்வார்ப் பெறின் என்றார். அறிவுடையார் ஆராய்ச்சியில் நாள் என்பது ஒரு பொருள் அன்று என்பதும், அது மனத்தின் கற்பனையே என்பதும் விளங்குமாகலான், உணர்வார்ப் பெறின் என்றார். ‘தோற்றஞ்சான் ஞாயிறு நாழிய வைகலுங், கூற்ற மளந்துநுந் நாளுண்ணும்’ என்றார் நாலடியார். மணக்குடவர் பாடம் ‘நாளென்ப தொன்று போல்’. ‘நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர்’ என்று கொண்டு கூட்டி, அதற்கு நாள் என்று அறுக்கப்படுவ தொரு காலவரையறை போலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளின் வாயது உயிர் என்று விளக்கமும் பொருத்தமும் இல்லாதவாறு பொருள் உரைப்பாரும் உளர். அவர் ‘காட்டி’ என்பதை வினையாலணையும் பெயராகக் கொள்ளாமல் வினையயச்ச மாகக் கொண்டும், ‘அஃது’ என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் கெட்டு நின்றது என்று கொள்ளாமல் ‘அது’ என்பது குற்றிய லுகரம் அன்றென உரைத்தும் இடர்ப்படுவ ராயினர்.

கருத்து: நாள் உயிரை அறுக்கும் வாள்.

நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும். (305)

பொருள்: நா செற்று விக்குள் மேல் வாரா (த) முன் - (பேசாத வாறு) நாவைச் செறுத்து விக்கல் மேலே வாராத முன்னர், மேல்சென்று நல்வினை செய்யபடும் - (ஒருவன்) விரைந்து நல்ல வினையைச் செய்ய வேண்டும்.

அகலம்: மேற் செல்லல் - விரைதல். செறுத்தல் - அடக்குதல். வாராத என்பது ஈறு கெட்டு நின்றது.

கருத்து: இளமையிலேயே அறஞ் செய்க.

நெருந லுளனொருவ னின் றில்லை யயன்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு. (306)

பொருள்: நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை - நேற்று உள்ளான் ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும் பெருமையை, இ உலகு உடைத்து -இவ் உலகம் உடையது.

அகலம்: உளன் என்பது குறிப்பு வினையாகலான், அது ‘நேற்று உளன்’, ‘இன்று உளன்’, ‘நாளை உளன்’ என முக்காலத்திலும் வரும். தருமர் பாடம் ‘பெருமை பிறங்கிற் றுலகு’.

கருத்து: உயிர் நிலையற்றது ; ஒரு கணத்தில் நீங்குவது.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல. (307)

பொருள்: ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப - (தாம்) ஒரு பொழுதும் வாழ்தலை அறியாதார் எண்ணுவன, கோடியும் அல்ல பல - கோடியும் அல்ல (அவற்றிற்கு மேலும்) பல (எண்ணங்கள்).

அகலம்: ‘எண்பது கோடிநினைந் தெண்ணுவன’ என்றார் ஒளவையார். ஒருபொழுதும் வாழ்வத றியார் (தம் வாழ்நாள்களைக்) கோடியும் அல்ல (அதற்கு மேலும்) பல என்று கருதுவர் என்றும், ஒரு பொழுதும் வாழ்வதறியார் கோடியு மன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினைப்பர் என்றும் உரைப்பார் சிலர்.

கருத்து: ஒரு பொழுதும் உடம்போடு கூடி உயிர் வாழ்தல் உறுதி இல்லை.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு. (308)

பொருள்: உடம்போடு உயிரிடை நட்பு - உடம்புடன் உயிரிடை (உண்டாய) நட்பு (நிலையாமை), குடம்பை தனித்து ஒழியபுள் பறந்தற்று - கூடு (மரத்தின்கண்) தனித்துக் கிடக்கப் பறவை (அதினின்று) பறந்தாற் போலும்.

அகலம்: ‘கூடு புள்ளுடன் தோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுத லு டைமையானும் உடம்பிற்கு உவமை யாகாமை யறிக’ என்று கூறிக் ‘குடம்பை’ என்பதற்கு ‘முட்டை’ எனப் பொருள் உரைப்பாரும் உளர். அவர் இவ் வதிகாரம் ‘நிலையாமை’ என்பதையும், இக் குறள் உடம்பை விட்டு உயிர் நீங்கும் தன்மை யையே கூறுகின்ற தென்பதையும், உடம்போடு உயிர் தோன்றுத லையாவது, உடம்பினுள் உயிர் மீண்டு புகாமை யையாவது கூற வந்த தில்லை யயன்பதையும் நோக்கிலர். அன்றியும், முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப் பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கே யன்றிப் புள் என்று சொல்லுதல் வழக் கன்று. மேலும், முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டது மில்லை. கேட்டது மில்லை. கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி, வாழாதே போவரான் மாந்தர்கள் -வாளாதே, சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து - நாலடியார்.

கருத்து: உயிர் நினைத்த மாத்திரத்தில் உடம்மை விட்டு நீங்கிவிடும்.

உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (309)

பொருள்: சாக்காடு உறங்குவது போலும் - இறத்தல் உறங்குதலை ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - பிறத்தல் உறங்கி விழித்தலை ஒக்கும்.

கருத்து: இறப்பும் பிறப்பும் மாறி மாறி வரும்.

புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு. (310)

பொருள்: உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - (வளி, அனல், நீர் இம் மூன்றற்கும் சொந்தமாய) உடம்பினுள் ஒதுக்குக் குடியாயிருந்த உயிருக்கு, புகு இல் அமைந் (த) தின்றோ -(நிலையாகப்) புகு(ந்திருக்கு)ம் இல்லம் அமைந்த தின்றோ.

அகலம்: வளி, அனல், நீர் என்பனவற்றை வட நூலார் முறையே வாதம், பித்தம், சிலேற்பனம் என்பர். அம் மூன்றில் ஒன்று வெகுளவே, உயிர் உடம்பை விட்டு ஓடிப்போம் என்ற வாறு. கொல் என்பது அசை. அமைந்த தின்று என்பது செய்யுள் விகாரத்தால் தகரம் கெட்டு நின்றது. அடு + இல் = அட்டில் என்றாயது போல, புகு +இல் = புக்கில் என்றாயது.

கருத்து: வாத பித்த சிலேற்பனங்களில் ஒன்று மிகுந்தால், உடனே உயிர் போய் விடும்.

No comments:

Post a Comment