Sunday

புறங் கூறாமை

பதினேழாம் அதிகாரம் - புறங் கூறாமை
அஃதாவது, (பிறன்) புறத்தில் (அவனைப் பழித்து) உரையாமை.

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது. (161)

பொருள்: ஒருவன் அறம் கூறான் அல்ல செய்யினும் - ஒருவன் அறங்களைக் கூறாதவனாய் மறங்களைச் செய்யினும், புறங்கூறான் என்றல் இனிது - புறங்கூறான் என்று சொல்லப்படுதல் (கேட்டோர்க்கு) இன்பம் பயக்கும்.

கருத்து: புறங்கூறல் மறஞ் செய்தலினும் தீது.

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (162)

பொருள்: புறன் அழீ பொய்த்து நகை - (ஒருவனது) புறத்தில் (அவனை) இழித்துக் கூறி (அவன் முன்னே உயர்த்துக் கூறிப்) பொய்த்து நகையாடல், அறன் அழீ அல்லவை செய்தலின் தீதே - அறங்களை அழித்து மறங்களைச் செய்தலினும் தீதே.

அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. அழித்துக் கூறலை அழித்தல் என்றார். ஒருவனை இழித்துக் கூறுதல் அவனது பெருமையை அழித்தலால், இழித்தலை அழித்தல் என்றார். அளபெடைகள் இரண்டும் இன்னிசைக்கண் வந்தன.

கருத்து: இதுவும் அது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும். (163)

பொருள்: புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் - (ஒருவனது) புறத்தே (அவனைப்) பழித்துக் கூறியும் (அவன் முன்னே) புகழ்ந்து கூறியும் உயிர் வாழ்தலினும், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - இறத்தல் அற நூல் (புறங் கூறாமைக்குச் ) சொல்லும் நன்மை (எல்லாம்) தரும்.

அகலம்: புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல் என்றமையால், பொய்த்து என்பதற்கு (அவன் முன்னே) உயர்த்துக் கூறி என்று பொருள் உரைக்கப்பட்டது. சாதல் என்பது இயற்கைச் சாவைக் குறித்து நின்றது. அறம் என்பது ஆகுபெயர், அறநூலுக்கு ஆயினமையால்.

கருத்து: புறங்கூறி வாழ்தலினும் சாதல் நன்று.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல். (164)

பொருள்: கண் நின்று கண் அற சொல்லினும் - (ஒருவனது) கண் முன் நின்று கண்ணோட்டம் நீங்க (அவன் குறைகளைக் ) கூறினும், முன் இன்று பின் நோக்கா சொல் சொல்லற்க - (அவன்) முன் இல்லாமல் (அவனைப் ) பின் நோக்காமைக்கு ஏதுவாகிய சொற்களைச் சொல்லற்க.

அகலம்: நோக்காமைக்கு ஏதுவாகிய சொல்லை ‘நோக்காச் சொல்’ என்றார். அச் சொல்லாவது, ‘புறங்கூறல்’. ‘முன் இல்லாமல்’ என்பது பின் நின்று எனப் பொருள் தந்து நின்றது. கண்ணோட்டம் - இரக்கம் . நச்சர் பாடம் ‘பின்னோக்குஞ் சொல்’.

கருத்து: புறங்கூறல் கண்ணோட்டமின்மையினும் தீது.

அறஞ்சொல்வா னெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (165)

பொருள்: அறம் சொல்வான் நெஞ்சத்தான் அன்மை - அறங்களைச் சொல்பவன் உள்ளத்தால் மறங்களை உள்ளுபவனா யிருத்தல், புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - (அவன்) புறங் கூறும் இழி செயலால் அறியப்படும்.

அகலம்: ‘அன்மை’ அப்பொருட்டாதலை ‘விழுப்பேற்றின்’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்திற் காண்க. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை’. இப்பாடம் பொருத்தமான பொருளொன்றையும் தாராமையின், ‘அறஞ்சொல்வான்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: அறஞ் சொல்பவன் புறஞ்சொல்லுவ னாயின், அவன் அறச் சொற்களெல்லாம் பொய்ச் சொற்கள் என்றறிக.

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும். (166)

பொருள்: பிறன் பழி கூறுவான் - பிறன் (புறத்தில் அவன்) பழிகளைக் கூறுபவன், தன் பழி உள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி யுள்ளும் திறனானவற்றைத் தெரிந்து (மற்றவரால்) கூறப்படுவான்.

அகலம்: ‘பல்லா ரவைநடுவண் பாற்பட்ட சான்றவர், சொல்லா ரொருவரையு முள்ளூன்றப் - பல்லா, நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும், உரைத்தா லுரைபெறுத லுண்டு’ என்றார் பழமொழியார்.

கருத்து: புறங்கூறுவான் பிறரால் புறங்கூறப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேறா தவர். (167)

பொருள்: நக சொல்லி நட்பு ஆடல் தேறாதவர் - மகிழும் படி (நல்ல சொற்களைச்) சொல்லி நட்புச் செய்தலை அறியாதவர், பக சொல்லி கேளிர் பிரிப்பர் - பிரியும்படியாகப் புறங்கூறி (த்தம்) நண்பரைப் பிரிப்பர்.

அகலம்: ‘கேளிர்’, ‘ஆடல்’ இரண்டாம் வேற்றுமைத் தொகைகள். தாமத்தர் பாடம் ‘பகைச் சொல்லின்’, ‘நகைச்சொல்லின்’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘தேற்றாதவர்’. தேற்றாதவர் என்பது ஈண்டுப் பொருத்தமற்ற பிறவினைப் பொருளைத் தருதலான், அது பிழைபட்ட பாடம் என அறிக.

கருத்து: புறங்கூறுவார் தமது நண்பரையும் பகையாக்கிக் கொள்வர்.

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னர்கொ லேதிலார் மாட்டு. (168)

பொருள்: துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - நெருங்கிய நண்பரது குற்றத்தையும் (பலர் அறியும்படி புறஞ்) சொல்லும் இயல்புடையவர், ஏதிலார்மாட்டு என்னர் ‡பகைவரிடத்து எத்தன்மை யராவர்?

அகலம்: நண்பரது புறத்தில் அவர் குற்றங்களை எடுத்துக் கூறுபவர் பகைவரது புறத்தில் அவரிடத்து இல்லாத குற்றங்களையும் எடுத்துக் கூறுவர் என்றவாறு. ‘கொல்’ அசை. தருமர், தாமத்தர், பரிமேலழகர் பாடம் ‘என்னைகொல்’. மணக்குடவர், நச்சர் பாடம் ‘என்னர்கொல்’. தருமர் பாடம் ‘மரபினர்’.

கருத்து: புறங்கூறுவார் பொய்ப்பழியுங் கூறுவர்.

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை. (169)

பொருள்: புறன் நோக்கி புன்சொல் உரைப்பான் பொறை - (பிறனது) புறத்தை நோக்கி இழிசொல் கூறுபவனுடைய உடற்சுமையினை, அறம் நோக்கி வையம் ஆற்றும் கொல் - (யாவரையும் சுமப்பது தனது கடனென்ற) அறத்தை நோக்கிப் பூமி தாங்குங் கொல்?

அகலம்: ‘கொல்’ என்னும் அசைச்சொல் ஈண்டு வினாப்பொருளில் வந்தது. பிறனது புறத்தை நோக்கி - பிறன் இல்லாத இடத்தைப் பார்த்து. மணக்குடவர் பாடம் ‘அறநோக்கி’, ‘புறநோக்கி’.

கருத்து: புறங்கூறுவாரது சாவைப் பலரும் விரும்புவர்.

ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு. (170)

பொருள்: ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கின் - பகைவரது குற்றங்களைக் காண்டல் போல் தமது குற்றங்களைக் காணின், பின் மன்னும் உயிர்க்கு தீது உண்டோ-பின்னர் நிலையுடைய மானிட உயிர்களுக்குத் தீமை உண்டோ? (இல்லை).

அகலம்: ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

கருத்து: அன்னியர் குற்றங்களைக் காண்டல் போல் தன் குற்றங்களை ஒருவன் காணின், தன் குற்றங்களை விடுத்து மேம் படுவான்.

No comments:

Post a Comment