Monday

முப்பத்து மூன்றாம் அதிகாரம் - மெய் யுணர்தல்
அஃதாவது, மெய்ப் பொருளை உணர்தல்.

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு. (321)

பொருள்: மாணா(த) பிறப்பு - மாட்சிமை யில்லாத பிறப்பு, பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று அறியும் மயக்கத்தால் உண்டாம்.

அகலம்: பிறப்புப் பல துன்பங்களைப் பொருந்தியிருத்தலானும், இறப்புப் பின்னர் எய்தலானும் அதனை மாணாப் பிறப்பு என்றார். மெய்ப் பொருள் - உண்மையான பொருள் - என்றும் உள்ள பொருள். அழிதல் மாலையனவாகிய உலகப் பொருள்களை அழியாமல் என்றும் நிலை நிற்கும் பொருள்க ளென்று கொள்ளுதல் மயக்க உணர்வு எனவும், அவ்வுணர் வுடைமையால் பிறப்பு உளதாகும் எனவும் கூறினார்.

கருத்து: உலகப் பொருள்களை உள்ள பொருள்களாகக் கருதல் பிறப்புக்குக் காரணம்.

இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (322)

பொருள்: மருள் நீங்கி மாசு அறு காட்சி அவர்க்கு - மயக்கத்தினின்றும் நீங்கிக் குற்றம் அற்ற அறிவினை யுடையவர்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - (நரகம் என்னும்) துன்பம் நீங்கி வீடு என்னும் இன்பம் உண்டாம்.

அகலம்: குற்றமற்ற அறிவாவது, மெய்ப்பொருளை மெய்ப்பொருளா கக் காணும் அறிவு. அவ் வறிவினை உடையார்க்குத் துன்பமே இல்லை எனவும், இன்பமே உண்டு எனவும் கூறினார். ‘பூத்தலும் பயத்தலும் உண்டாதற் பொருள்’ என்று சேந்தன் திவாகரம் கூறுகின்றமையால், பயக்கும் என்பதற்கு உண்டாம் என்று பொருள் உரைக்கப்பட்டது. இத் திவாகரத்தை அறியாதார் இருள் நீக்கி என்பதன் ககர ஒற்றுத் தொடை நோக்கி மெலிந்தது என உரைப்பர்.

கருத்து: மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கும்.

ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து. (323)

பொருள்: ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு -ஐயத்தினின்று நீங்கி (மெய்ப் பொருளைத்) தெளிந்தவர்க்கு, வானம் வையத்தின் நணியது உடைத்து - வீட்டுலகம் பூவுலகைப் போல அணித்தாதலையுடையது.

அகலம்: ‘மெய்ப்பொருளை’ என்பது அதிகாரத்தால் கொள்ளப்பட்டது. ஐயம் - சந்தேகம். அணித்தாதல் - சமீபமாதல். தெளிதலாவது, பொய்ப் பொருளைப் பொய்ப் பொருளாகக் கண்டு நீக்கி, மெய்ப்பொருளை மெய்ப்பொருளாக அறிதல். மணக்குடவர் பாடம் ‘நீங்கித் துணிந்தார்க்கு’.

கருத்து: மெய்ப்பொரு ளுணர்ந்தார் வீட்டினை அடைவர்.

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. (324)

பொருள்: மெய் உணர்வு இல்லாதவர்க்கு - மெய்ப்பொருளின் உணர்வு இல்லாதவர்க்கு, ஐ உணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்று- ஐந்து உணர்வுகள் எய்திய இடத்தும் பயன் இல்லை.

அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஐ யுணர்வுகள் எய்தலாவது, தேச காலங்களால் தடுக்கப்படாது ஐம்புலங்களையும் ஐம்பொறிகள் அறிதல். அஃதாவது, கண் மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள பொருள்களைக் காண்டல் ; அவ்வாறே செவி, மூக்கு, மெய், வாய் என்னும் மற்றைய நான்கு பொறிகளும் முறையே மூன்று காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் உள்ள ஓசை, நாற்றம், ஊறு, சுவை என்னும் மற்றைய நான்கு புலங்களையும் அறிதல். இதற்குப் பிறரெல்லாம் பொருட் பொருத்தம் இல்லாதபடி உரைத்தார். தாமத்தர் பாடம் ‘பயனின்றே’.

கருத்து: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐயுணர்வு எய்திய வழியும் பயன் இல்லை.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (325)

பொருள்: எ பொருள் எ தன்மைத்து ஆயினும் - எப் பொருள் எத்தன்மையை யுடையதாயினும், அ பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப் பொருளின்கண் மெய்ப்பொருளைக் காண்பது அறிவு.

அகலம்: உலகப்பொருள்களின் நாம ரூபங்களை விடுத்து, அவற்றிற்கு ஆதாரமான உண்மைப் பொருளைக் காண்டல் அறிவு. நாமம் - பெயர். ரூபம் - உருவம். இக் குறளால் உலகப் பொருள்கள் மூலமாக மெய்ப் பொருளைக் காணும் வழியைக் கூறினார்.

கருத்து: உலகப் பொருள்களுக்கு ஆதாரமா யுள்ளது மெய்ப்பொருள்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (326)

பொருள்: கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் -(கற்கத் தக்க நூல்களைக்) கற்று இவ்வுலகின்கண் மெய்ப்பொருளைக் கண்டவர், மற்று ஈண்டு வாரா(த) நெறி தலைப்படுவர் - திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழியை அடைவர்.

அகலம்: மெய்ப்பொருளைக் காண்டற்குக் கல்வி இன்றியமையாத தென்பதைக் குறிப்பதற்காகக் ’கற்று’ என்றார். கற்கத் தக்க நூல்களாவன, அறநூலும் ஆன்ம நூலும். இவ் வுலகத்தைவிட்டு வேறு உலகத்தில் மெய்ப் பொருளைக் காணலாகுமோ என்று நினைப்பாரைக் கருதி, இவ் வுலகின் கண்ணேயே மெய்ப்பொருளைக் காணலாகும் என்றார். மெய்ப்பொருளைக் கண்டார் பிறப்பு இறப்புக்களினின்று நீங்குவர் என்பது ஒரு தலையாகலின், மற்று ஈண்டு வாராநெறி தலைப்படுவர் என்றார். வாராத என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. இக் குறளால் மெய்ப் பொருளை இவ் வுலகத்தின்கண்ணே காணலாகும் என்றார்.

கருத்து: மெய்ப் பொருளைக் கண்டார் பிறப்பினை அடையார்.

ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (327)

பொருள்: ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் -(அகத்துள் நோக்கி) ஆராய்ந்து உள்ளத்தின்கண் உள்ளதாகிய மெய்ப்பொருளை உணரின், ஒருதலையா(க) பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா -உறுதியாகத் திரும்பிப் பிறப்பினை நினைக்க வேண்டா.

அகலம்: இக் குறளால் அகத்தினுள்ளே மெய்ப்பொருளைக் காணும் வழியைக் கூறினார். உள்ளத்தின்கண் உள்ளதாகிய மெய்ப் பொருளாவது, உளத்தாலும், பொறிகளாலும், உயிர் செய்வனவற்றை யயல்லாம் சான்றாகக் கண்டுகொண் டிருக்கும் அறிவு. ஈண்டும் மெய்ப்பொருளைக் கண்டார்க்குப் பிறப்பு இறப்புக்கள் இல்லை யயன்பதை வற்புறுத்தினார். ஒருதலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.

கருத்து: உள்ளத்தின்கண் உள்ளதாகிய அறிவை உணர்ந்தார்க்குப் பிறப்பு இல்லை.

பிறப்பீனும் பேதைமை நீங்கிச் சிறப்பீனுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. (328)

பொருள்: பிறப்பு ஈனும் பேதைமை நீங்கி - பிறப்பை நல்கும் மடமையினின்று நீங்கி, சிறப்பு ஈனும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டை நல்கும் செவ்விய பொருளைக் காண்பது அறிவு.

அகலம்: பிறப்புக்குக் காரணம் மடமை என்பதும், அதனை நீக்க வல்லது மெய்யறிவே என்பதும் இக் குறளால் கூறப்பட்டன. செவ்விய பொருள் - குற்றம் இல்லாத பரம் பொருள். தாமத்தர் பாடம் ‘பிறப்பீனும்’; ‘நீங்கி’, ‘சிறப்பீனும்’. மற்றை நால்வர் பாடம் ‘சிறப்பென்னும்’, ‘நீங்க’, ‘பிறப்பென்னும்’. தாமத்தர் பாடமே நேரிய பொருளைத் தருகின்றமையான், அவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. ‘பேதைமை’ ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: மெய்ப்பொருளைக் காண்டலே மெய்யறிவு.

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தார சார்தரு நோய். (329)

பொருள்: சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - (எல்லாவற்றிற்கும்) ஆதாரமாயிருக்கிற மெய்ப்பொருளை உணர்ந்து தனது (அகப் புறப்) பற்றுக்கள் ஒழிய ஒருவன் ஒழுகின், சார்தரும் நோய் மற்று அழித்து சார்தரா - (மேல்) சாரக் கடவனவாய துன்பங்கள் அவ்வொழுக்கத்தை அழித்துச் சார மாட்டா.

அகலம்: அவ்வொழுக்கம் அழிந்தாலன்றித் துன்பங்கள் வாராவென்பதும், துன்பங்கள் அவ்வொழுக்கத்தை அழிக்கும் வலியுடையன அல்ல என்பதும் இதனால் கூறப் பெற்றன. தருமர் பாடம் ‘சார்வுணர்ந்து சார்வு’.

கருத்து: மெய் யுணர்வுடையார்க்குத் துன்பங்கள் இல்லை.

காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய். (330)

பொருள்: காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாம(மு)ம் கெட - காமமும் கோபமும் மயக்கமும் (ஆகிய) இவை மூன்றினுடைய பெயர்களும் கெட, நோய் கெடும் - துன்பங்களெல்லாம் அழியும்.

அகலம்: இறந்தது தழீஇய எச்ச உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. அவ் வும்மை காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் தழுவி நின்றது.

கருத்து: இவை மூன்றும் கெடவே, மெய்யுணர்வு உண்டாம்; மெய்யுணர்வு உண்டாகவே, முன் வினைப் பயன்களாகிய துன்பங்க ளெல்லாம் ஒழிந்து போம்.

No comments:

Post a Comment