Friday

அறன்வலியுறுத்தல்

திருவள்ளுவர் திருக்குறள்

அறப்பால்அஃதாவது, அறத்தின் பகுதி.

பாயிரம்பாயிரம் ‡ முகவுரை

முதல் அதிகாரம் ‡ அறன் வலியுறுத்தல்

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு. (1)

பொருள்: சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் ‡ வீட்டினைக் கொடுக்கும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தின் மேற்பட்ட நல்வினை, உயிர்க்கு எவன் ‡ மனித உயிர்க்கு யாது? (ஒன்றும் இல்லை).

அகலம்: ‘ஓகாரம் அசை. ஆக்கம் - செல்வம். அஃது ஈண்டு ஆகுபெயர், அதனைத் தரும் நல்வினைக்கு ஆயினமையால். இன்பத்தையும் புகழையும் தரும் செல்வத்தையும் தழுவி நிற்றலால், செல்வமும் என்பதன் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. உம்மையைச் செல்வம் என்பதனோடு மாத்திரம் சேர்ந்திருத்தலானும், ஈனும் என்னும் சொல்லைச் சிறப்பு என்பதனோடும் செல்வம் என்பதனோடும் சேர்ந்திருத்தலானும், மேற்கண்டவாறு பொருள் உரைத்தலே பொருத்தம். சிறப்பீனுஞ் செல்வமாவது, ஞானம்.

கருத்து: இன்பமும் புகழும் தரும் செல்வத்தோடு வீட்டைத் தரும் செல்வத் தையும் அறம் கொடுக்கும்.

அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு. (2)

பொருள்: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை‡ அறத்தின் மிக்க நல்வினையும் இல்லை. அதனை மறத்தலின் ஊங்கு கேடும் இல்லை ‡ அதனை மறத்தலின் மிக்க தீவினையும் இல்லை.

அகலம்: கேடும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆக்கம், கேடு என்பன ஆகுபெயர்கள், அவற்றைத் தரும் வினைகளுக்கு ஆயினமையால்.
மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘மறத்தலினூங் கில்லையாம்.

கருத்து:அறத்தின் மேம்பட்ட நல்வினை இல்லை; அதனைச் செய்யாது விடுதலிற் கீழ்ப்பட்ட தீவினை இல்லை.

ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யயல்லாம் செயல். (3)

பொருள்: செல்லும் வாய் எல்லாம் ‡ செய்யக்கூடும் இடத்திலெல்லாம், ஒல்லும் வகையான் ‡(தனக்கு) இயலும் அளவினால், ஓவாது அறவினை செயல் ‡ (ஒருவன்) இடைவிடாது அறவினையைச் செய்க.

அகலம்: ஏகாரம் அசை. அறவினை ‡ நல்வினை. ‘ஆற்றுந் துணையா லறஞ் செய்கை முன்னினிது’‡இனியவை நாற்பது. தாமத்தர் பாடம் ‘ஒல்லும் வாயயல்லாம்’.

கருத்து: செய்யக்கூடிய இடங்களிலெல்லாம் அறவினையை இடைவிடாது செய்க.

மனத்துக்கண் மாசில னாவ தனைத்தற
னாகுல நீர பிற. (4)

பொருள்: மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் ‡ உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்; பிற ஆகுல நீர‡ மனத்துக்கண் குற்ற முள்ள வனாய்ச் செய்யப் படுவன துன்பம் தருவன(வாகிய மறங்களாம்).

அகலம்: அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் நீர்மை. மற்றை உரையாசிரியர்கள் நால்வர் பாடம் ‘மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்’. அதற்கு அவர்களுரை, (அறஞ்செய்வான்) தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக. அவ்வளவே அறம்.(ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆதல் ஓர் ஒழுக்கம் ஆகுமே யன்றி அறமாகாது. என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல். அது பற்றியே, ஆசிரியர் ‘அறவினையோவாதே செல்லும் வாயயல்லாஞ் செயல்’, ‘அன்றறிவாமென்னா தறஞ் செய்க’, ‘வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்’, ‘செயற்பால தோறும் அறனே’ என்று கூறியுள்ளார். அன்றியும், ‘மனத்தின்கண் மாசிலனாதலே அறம்’ என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய அறங்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக்காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆகலான், ‘மாசில னாத லனைத்தறன்’ என்பது ஏடு பெயர்த்தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்துபோய்ப் பின்னர் ஊகித்து எழுதப்பட்ட வற்றால் நேர்ந்த பிழை எனக் கொள்க.

கருத்து: குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகளெல்லாம் அறமாம்.

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம். (5)

பொருள்: அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது ‡ பொறாமை ஆசை வெகுளி இன்னாச் சொல் (இந்) நான்கையும் நீக்கிச் செய்யப் பெற்ற வினை, அறம்‡ அறமாம்.

அகலம்: வெகுளி‡கோபம். இன்னாச் சொல் ‡ துன்பந்தருஞ் சொல். ‘இழுக்கா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினை யயச்சம். இயன்றது ‡ நிகழ்ந்தது ‡ செய்யப்பட்ட வினை. இழுக்கி ‡ நீக்கி.

கருத்து: இந் நான்கு குற்றங்களோடு சேராத வினை அறமாம்.

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (6)

பொருள்: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க‡இறக்கும் ஞான்று செய்வாம் கருதாது (இற்றை ஞான்றே ஒவ்வொருவரும்) நல் வினையைச் செய்க ; பொன்றுங்கால் அது பொன்றா(த) துணை‡ (அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன்) செல்லும் துணையாம்.

அகலம்: ‘பொன்றுங்கால்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான். அன்று என்பதற்கு இறக்கும் ஞான்று என்று பொருள் உரைக்கப்பட்டது. ஞான்று ‡ நாள். அறிதல் என்பது ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டு, உரை காண்டல் என்பது உரை செய்தல் என்னும் பொருட்டாதற் போல. ‘மற்று’ அசை. ‘தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற், றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை‡ யாங்குத்தாம், போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே, கூற்றங்கொண்டோடும் பொழுது.’ ‡ நாலடியார்.

கருத்து: அறமே உயிர்க்கு உற்ற துணையாகலான், அதனை இன்று முதலே செய்க.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை. (7)

பொருள்: சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை‡ பல்லக்கைச் சுமந்தவனோடு (பல்லக்கிலிருந்து அதனைச்) செலுத்தியவன் (ஆகிய இருவர்) இடையில், அறத்து ஆறு இது என வேண்டா ‡ அறத்தின் பயன் இன்னது என்று (சுட்டிச்) சொல்ல வேண்டா (அது கண்கூடாகவே விளங்கும்).

அகலம்: பயனை ஆறு என்றார்.

கருத்து: பல்லக்கில் செல்கின்றவனிடத்தில் அறத்தின் பயனை காட்சியிற் காணலாம்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (8)

பொருள்: வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் ‡ தவறும் நாள் உண்டா காமல் (ஒருவன்) அறத்தைச் செய்யின், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் ‡ அவ்வாறு அறத்தைச் செய்தல் ஒருவன் வாழும் நாளின் வழியை அடைக்கும் கல்லாம்.

அகலம்: வீழ், வாழ் என்பன வினைத்தொகைகள். அகர அளபெடை இசை நிறைக்க வந்தது.

கருத்து: நாள்தோறும் செய்யப்படும் அறம் பிறப்பை ஒழிக்கும்.

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில. (9)

பொருள்: அறத்தால் வருவதே இன்பம்‡ அறத்தின் (பயனாக) வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த ‡மறத்தின் (பயனாக) வருவதெல்லாம் துன்பங்கள்; புகழும் இல‡ புகழும் இல்லாதவை.

அகலம்: அறம் ‡ நல்வினை. மறம் ‡ தீவினை. ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. மறத்தால் வருவன புகழுமில்லாதவை என்றமையால், அறத்தால் வருவன புகழு முள்ளவை என்று கொள்க. அறத்தால் வருவதென்று கூறிப் பின்னர் ‘மற்றெல்லாம்’ என்றமையால், ‘மற்றெல்லாம்’ என்பதற்கு ‘மறத்தால் வருவதெல்லாம்’ என்று பொருள் உரைக்கப்பட்டது. ‘ஈனுலகத் தாயி னிசை பெறூஉ மஃதிறந், தேனுலகத் தாயி னினிததூஉம்’ என்றார் பழமொழி யார். ஈனுலகம் ‡ இவ் வுலகம். ‘ஏ’னுலகம் ‡ ஏனை யுலகம்.

கருத்து: அறத்தால் புகழும் இன்பமும் வரும்; மறத்தால் இகழும் துன்பமும் வரும்.

செயற்பால தோரு மறனே யயாருவற்
குயற்பால தோரும் பழி. (10)

பொருள்: ஒருவற்கு செய்யல் பாலது அறன் ‡ ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினை; உய்யல் பாலது பழி ‡ (செய்யாது) விடுதற் பான்மை யது தீவினை.

அகலம்: செய்யல், உய்யல் என்பன செய்யுள் விகாரத்தால் யகர வொற்றுக் கெட்டு நின்றன. ஒரும் என்பன இரண்டும், ஏகாரமும் அசைகள். பழிக்கப்படும் மறத்தினைப் பழி யயன்றார்.

கருத்து: மக்கள் செய்தற்பாலது அறம். விடுதற்பாலது மறம்.

No comments:

Post a Comment