Friday

இல்வாழ்க்கை

இல்லறவியல்
அஃதாவது, இல் வாழ்வார் செய்ய வேண்டிய அறங்களின் இயல்பு. இல் - இல்லம் - வீடு. அறம் -தருமம். இயல் -இயல்பு.

இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை
அஃதாவது, இல்லின்கண் வாழ்தல்.

இல்வாழ்வா னென்ப வியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னிற்குந் துணை. (11)

பொருள்: இல்வாழ்வான் - இல்லின்கண்ணே வாழ்பவன், இயல்பு உடைய மூவர்க்கும் - (அவன்) இயல்பாக உடைய தாய், தந்தை, தாரம் என்னும் மூவர்க்கும், நல் ஆற்றின் -(அவருடைய) நல்ல நெறியின் கண்ணே, நிற்கும் துணை - (அவருக்கு உதவுதற்காக) நிற்கும் துணை (யாவன்).

அகலம்: இல் வாழ்வான் இயல்பாக வுடைய மூவர், அவனுடைய தாய், தந்தை, தாரம் ஆகிய மூவரே. அவருடைய நல்ல நெறியின் கண்ணே அவர் ஒழுகுதற்கு உதவி புரியும் துணை. ‘இயல்புடைய மூவர்க்கும்’ என்பதற்கு ‘அற இயல்பினை யுடைய ஏனை மூவர்க்கும்’ என்றும், அம் மூவர் பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்றும் உரைப்பாரும் உளர். ‘என்ப’ அசை. தாமத்தர் பாடம் ‘இல்வாழ்வா னென்ப’ ; ‘நிற்குந் துணை’. மற்றை உரையாசிரியர் நால்வர் பாடம் ‘இல்வாழ் னென்பான்’ ; ‘நின்ற துணை’. இவர்கள் பாடத்தினும் தாமத்தர் பாடம் சிறந்த தாகலான், அதுவே ஆசிரியர் பாடமெனக் கொள்ளப்பட்டது.

கருத்து: நன் னெறியில் ஒழுகும் தாய், தந்தை, தாரமாகிய மூவர்க்கும் இல்வாழ்வான் துணை.

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை. (12)

பொருள்: இல் வாழ்வான் என்பான் -இல் வாழ்வான் என்று சொல்லப் படுபவன், துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் - (இல் வாழ்க்கையைத்) துறந்தவர்க்கும் வறியவர்க்கும் (சுற்றம் இலராய்த் தம்பால் வந்து) இறந்தவர்க்கும், துணை- (உதவி புரியும்) துணை (யாவன்).

அகலம்: துவ்வாதார் என்பது துவ்வு என்னும் பகுதியடியாகப் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயர். துவ்வு -ஐம்பொறி நுகர்ச்சி ; அதற்கு உரிய பொருள்கள் இல்லாதாரைத் துவ்வாதார் என்றார். இறந் தார்க்குச் செய்யும் உதவியாவது, அவர் உடலைத் தீயி லிடுதல் முதலியன.

கருத்து: மேற் கூறிய மூவரோடு இம் மூவர்க்கும் இல்வாழ்வான் துணை.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா ரோம்ப றலை. (13)

பொருள்: தென்புலத்தார் - மெய்யறிவுடையார், தெய்வம் - (தான் தொழும்) தெய்வம், விருந்து-விருந்தினர், ஒக்கல்‡ உறவினர், தான்‡(இல் வாழ்வானாகிய) தான், ஐம்புலத்தார் ‡(இவ்) வைந்து இடத்தவரையும், ஓம்பல்-பேணுதல், தலை- (இல்லறங்களில்) தலையாய அறம்.

அகலம்: தென் - அழகிய. புலம்‡அறிவு. அழகிய அறிவாவது, மெய்யறிவு. அதனால் ‘தென்புலத்தார்’ என்பதற்கு ‘மெய்யறி வுடையார்’ எனப் பொருள் உரைக்கப்பட்டது. விருந்து - புதுமை. அஃது ஈண்டுப் புதியராய் வந்த விருந்தினரைக் குறித்து நின்றது. ‘என்று’ என்பது எண்ணிடைச் சொல். ‘ஆங்கு’ அசை. தலையாய அறத்தைத் ‘தலை என்றார். தாமத்தர், நச்சர் பாடம் ‘ஐம்புலத்தாரோம்பல்’. மற்றை மூவர் பாடம் ‘ஐம்புலத்தா றோம்பல்’. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (என்னும்) ஐம்புலம் என்பது திணை வழு. ஆசிரியர் இக் குறளின் முதலடியில் ஐம்புலத்தாரைக் கூறினரே யன்றி ஐம்புலத்தைக் கூறிற்றிலர். ஆகலான், அவர் பின்னர் ஐம்புலத்தாரை யோம்பல் என்று கூறுவரேயன்றி ஐம்புலத்தாற்றை யோம்பல் என்று கூறார். அன்றியும், ‘ஆறு’ என்பதற்கு நெறி என்பது தானே பொருள்? ‘ஐந்திடத்து நெறி’ என்பதற்குப் பொருள் ‘ஐந்திடத்திற் சேர்க்கும் நெறி’ அல்லது ‘ஐந்திடத்திற் செல்லும் நெறி’ என்பதுதானே? அப்பொருள் ஈண்டு எவ்வாற்றானும் பொருத்த முடைய தன்று. இக் காரணங்களால் ‘ஐம்புலத்தா றோம்பல்’ என்பது ஒருவன் படிக்க மற்றொருவன் கேட்டு ஏடு பெயர்த் தெழுதியதால் நேர்ந்த பிழை என்று கொள்க. பிற நூலாசிரியர்களும் ‘ஐம்புலத்தா ரோம்பல்’ என்றே கூறியிருக் கிறார்கள். ‘தென்புலத்தார்’ என்பதற்குப் ‘பிதிரர்’ என்று உரைப்பாரும் உளர்.

கருத்து: இக்குறளிற் கூறிய ஐந்து இடத்தவரையும் பேணுதல் இல்லறங் களில்தலையாய அறம்.

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியயஞ்ச லெஞ்ஞான்று மில். (14)

பொருள்: வாழ்க்கை பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்தாயின் ‡ இல் வாழ்க்கை மறத்தை விடுத்து (மேலே கூறிய பலர்க்கும்) பகுந்து (கொடுத்து) உண்ணுதலை உடைத்தாயின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்-(தனது) நெறியில் குறை பாடுறுதல் எந்நாளும் இல்லை.

அகலம்: இல் வாழ்க்கை என்பது இல் வாழ்வார்மேல் நின்றது. இல் வாழ்க்கை நெறியில் - இல்லறம் புரிதலில். பொருளின்மை, மக்களின்மை, முதலியவற்றால் இல்லறம் குறைபாடுறும். அக்குறைபாடு பழி யஞ்சிப் பாத்தூணுடையார்க்கு இல்லை என்றவாறு. தாமத்தர் பாடம் ‘பாத்த லுடைத்தாயின்’. நச்சர் பாடம் ‘உடைத்தாய வாழ்க்கை’.

கருத்து: பாவஞ் செய்யாது பலர்க்கும் பகுந்து கொடுத்து உண்ணும் இல் வாழ்க்கை எஞ்ஞான்றும் இனிது நடைபெறும்.

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது. (15)

பொருள்: இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் - அவ்வுடைமை (இல் வாழ்க்கையின்) பண்பும் பயனு மாம்.

அகலம்: ஈண்டும் இல் வாழ்க்கை என்றது இல் வாழ்வாரைக் குறித்து நின்றது. பண்பு -தன்மை. பயன்- ஊதியம். நச்சர் பாடம் ‘உடைத்தாய வில்வாழ்க்கை’ ; ‘பயனுந் தரும்’.

கருத்து: அன்புடைமையும் அறனுடைமையும் முறையே இல் வாழ்க்கை யின் பண்பும் பயனும் ஆம்.

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்? (16)

பொருள்: அறத்து ஆற்றின் இல் வாழ்க்கை ஆற்றின் -இல் வாழ்க்கை நெறியிலே இல் வாழ்க்கையை (ஒருவன்) நடாத்தின், புறத்து ஆற்றில் போய் பெறுவது எவன் - (அவன்) துறவு நெறியிற் சென்று (இல்வாழ்வான் பெறுவதினும் மிகுதியாய்ப்) பெறும் பேறு யாது? (ஒன்றும் இல்லை).

அகலம்: ‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்றமையால், அறம் என்பதற்கு இல் வாழ்க்கை என்று பொருள் உரைக்கப்பட்டது. ‘ஒகர’ அளபெடை இசை நிறைக்க வந்தது. தாமத்தர் பாடம் ‘இல்வாழ்க்கை யாற்றா’.

கருத்து: இல்வாழ்க்கை நெறியிலே இல் வாழ்க்கையை நடாத்துகிற இல் வாழ்வானும் துறவு நெறியிலே துறவை நடாத்துகிற துறவியும் பெறும் பேறு ஒன்றே.

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை. (17)

பொருள்: இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான்- (இல் வாழ்க் கைக்குரிய) இயல்போடு (கூடி) இல் வாழ்க்கையை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை ‡ (வீட்டுப் பேற்றை அடைய) முயல்பவரு ளெல்லாம் முதன்மையானவன்.

அகலம்: ‘ஆன்’ என்னும் உருபு ‘ஓடு’ என்னும் பொருளில் வந்தது. தாமத்தர் பாடம் ‘என்ப’. மற்றை நால்வர் பாடம் ‘என்பான்’.

கருத்து: இயல்பினான் இல்வாழ்வான் வீட்டுப் பேற்றை அடைய முயல்வாருள் முதன்மையானவன்.

ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்றலி னோன்மை யுடைத்து. (18)

பொருள்: ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல் வாழ்க்கை ‡ (ஏனைய நிலையினரை அவரவர்) நெறியின்கண்ணே நடாத்துவித்து இல்லறத்தில் தவறாத இல் வாழ்க்கை, நோற்றலின் நோன்மை உடைத்து - தவ மிழைத்தலைப் போல மேம்பாடு உடையது.

அகலம்: நிலையை ‘ஆசிரமம்’ எனவும், நிலையினனை ‘ஆசிரமி’ எனவும் வடநூலார் கூறுவர். அவர் ஆசிரமங்களைப் பிரமச்சரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என நான்காகவும், அவ்வாசிரமிகளை முறையே பிரமச்சாரி, கிருகத்தன், வானப்பிரத்தன், சந்நியாசி எனவும் கூறுவர். பிரமச்சாரி-மாணவன். கிருகத்தன்‡இல்வாழ்வான். வானப்பிரத்தன் ‡ மனையாளோ டாயினும், தனித்தாயினும் வனத்திற் சென்று தவம் புரிவோன். சந்நியாசி‡ துறவி. மாணவன் நிலையினை இல் வாழ்க்கையில் அடக்கியும், தவம் புரிவோன் நிலையினைத் துறவில் அடக்கியும் நிலையினை இல் வாழ்க்கை, துறவு என இரண்டாகவும் அந் நிலையினரை முறையே இல்வாழ்வான், துறவி எனவும் தமிழ் நூலார் கூறுவர். நடாத்து வித்தலாவது, அவருக்கு உண்டி முதலியன உதவி, அவர் தம் நெறியில் தளராது செல்லும்படி செய்தல். மணக்குடவர் பாடம் ‘நோற்றலின்’. மற்றை உரையாசிரியர் நால்வர் பாடம் ‘நோற்பாரின்’. ‘நோற்றலின்’ என்பது தொடை யின்பம் பயத்தலானும், இல் வாழ்க்கை என்பது போல ஒரு செயலைக் குறிக்கின்றமையானும், ‘நோற்றலின்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: இல் வாழ்க்கை துறவினைப் போலவே மேம்பாடு உடையது.

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று. (19)

பொருள்: அறன் எனப்பட்டது இல் வாழ்க்கையே ‡ அறம் என்று சிறப்பித்து (நூல்களால்) சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று ‡ துறவும் மற்றொருவன் பழிப்பதற்கு ஏதுவாகிய கூடா வொழுக்கம் இல்லையாயின் அறமாம்.

அகலம்: ‘எனப்பட்டதே’ என்பதினின்று ‘ஏகார’த்தைப் பிரித்து ‘இல் வாழ்க்கை’ என்பதனோடு சேர்த்துப் பொருள் உரைக்கப் பட்டது. அது பிரிநிலைக்கண் வந்தது. ஈண்டுக் கூறப்படாது சேய்மையின்கண் கூறப்படுதலானும், ஆண்டு ‘உலகம் பழித்த தொழித்து விடின்’ என்று கூறப் படுதலானும், அஃது என்பதற்குத் துறவு என்று பொருள் உரைக்கப்பட்டது. உலகம் பழித்தது ஒழியாவிடின், துறவு அறம் எனப்படுதற்குரிய பெருமையுடைய தன்று என்றவாறு. ‘வீழ்நாள் படாஅமை’ என்னும் தொடக்கத்துக் குறளில் அறத்தை நன்று எனக் கூறியிருத்தல் காண்க.

கருத்து: இல் வாழ்க்கையே அறம் ; கூடா வொழுக்கம் இல்லையேல், துறவும் அறமாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும். (20)

பொருள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்-பூவுலகத்துள் (இல் வாழ்வான்) வாழ வேண்டிய படி வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ‡ வானுலகத்தில் வாழும் தேவருள் (ஒருவனாக) மதிக்கப்படுவான்.

அகலம்: அவ்வாறு வாழ்பவன் இறந்த பின்னர் வானுலகத்தில் தேவனாய் வாழ்வன் என்று உரைப்பினும் அமையும், கொழுநனைப் பேணிய பெண்டிர் இறந்த பின்னர் வானுலகத்தில் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்று ஆசிரியர் அடுத்த அதிகாரத்திற் கூறுகின்றமையால்.

கருத்து: இல் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துகின்றவன் தேவனாவான்.

No comments:

Post a Comment