Sunday

அருளுடைமை

துறவற வியல்
இது, துறவு, அறம், இயல் என்னும் மூன்று சொற்களா லாய தொடர்மொழி. துறவு-(இல் வாழ்க்கையைத்) துறத்தல். அறம் - தருமம். இயல் - இயல்பு. ஆகவே, அத் தொடர்மொழி இல்வாழ்க்கையைத் துறந்தார்களது அறங்களின் இயல்பு எனப் பொருள்படும்.

இருபத்திரண்டாம் அதிகாரம் - அருளுடைமை.
அஃதாவது, உயிர்கள்மாட்டுக் கருணை யுடைமை.

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள. (211)

பொருள்: அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் -அருளாகிய செல்வம் செல்வத்து ளெல்லாம் (சிறந்த) செல்வம் ; பொருள் செல்வம் பூரியார்கண்ணும் உள - பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன.

அகலம்: அருள் -தண்ணளி‡கருணை. அதனை வட நூலார் ‘கிருபை’, ‘காருண்யம்’ என்பர்.

கருத்து: அருளுடைமை செல்வத்து ளெல்லாம் சிறந்த செல்வம்.

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை. (212)

பொருள்: நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க -(ஒருவன்) நல்ல நெறியின்கண் நின்று விரும்பி அருளை ஆள்க ; பல் ஆற்றால் தேரினும் அஃதே துணை - பல வழிகளால் ஆராயினும் அருளே (மக்களுயிர்க்குத்) துணை.

அகலம்: அருளை ஆளுதல்‡உயிர்களிடத்துக் கருணை செலுத்துதல். நல்லாற்றான் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையான். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. தருமர்,தாமத்தர் பாடம் ‘தேறினும்’.

கருத்து: வீட்டினை அடைவதற்கு அருளே துணை.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல். (213)

பொருள்: இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் -இருள் பொருந்திய துன்ப உலகின்கண் புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை-அருள் பொருந்திய மனத்தை யுடையார்க்கு இல்லை.

அகலம்: இருள் பொருந்திய துன்ப உலகமாவது, நரகம்.

கருத்து: அருளுடையார்க்கு நரகம் இல்லை.

மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை. (214)

பொருள்: தன் உயிர் அஞ்சும் வினை - தனது உயிர் அஞ்சும்படியான செயல், மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு இல் என்ப (ஆன்றோர்) - நிலை பேறுடைய உயிர்களைப் பேணி அருளினை ஆள்பவனுக்கு இல்லை என்பர் ஆன்றோர்.

கருத்து: அரு ளுடையார்க்கு அச்சம் இல்லை.
அல்ல லருளாள்வார்க் கில்லை வழிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. (215)

பொருள்: அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளினை ஆள்பவ ருக்குத் துன்பம் இல்லை; வழி வழங்கும் மல்லன் மா ஞாலம் கரி-(அதற்கு அற) நெறிகளை (உள்ளவாறு) உணர்த்தும் (அறிவு) வளம், பொருந்திய பெருமை நிறைந்த மெய்ஞ்ஞானிகளே சாட்சிகள்.

அகலம்: ‘உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே’ என்றும், ‘ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமு’ம் என்றும் ஆன்றோர் கூறியிருத்தலான், மா ஞாலம் என்பதற்குப் பெருமை நிறைந்த மெய்ஞ் ஞானிகள் என்று பொருள் உரைக்கப் பட்டது. அற நெறிகளை விதிக்கத் தக்கோர் மெய்ஞ் ஞானிகளே. அவர்கள் அருளுடையவர்களென்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வளிவழங்கு மல்லன் மா ஞாலங் கரி’. அரு ளாள்வார்க்கு அல்லல் இல்லை யயன்பதை உலகத்தார் அறிய முடியா தாகலானும், மெய்ஞ் ஞானிகளுக்கு அல்லல் இல்லை யயன்பதை அவரைக் காண்பவர் யாரும் அறியக் கூடுமாகலானும், ‘வழிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: அருளுடையார்க்குத் துன்பம் இல்லை என்பதற்கு மெஞ்ஞானி சான்று.

பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார். (216)

பொருள்: அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - அருளினின்று நீங்கிப் பாவங்களைச் செய்து நடப்பவர், பொருள் நீங்கி பொச்சாந்தார் என்ப - மெய்ப் பொருளினின்று நீங்கி (அதனை) மறந்தார் என்பர் (ஆன்றோர்).

அகலம்: தாமத்தர், நச்சர் பாடம் ‘பொய்ச்சாந்தார்’.

கருத்து:அருளை நீத்தவர் மெய்ப்பொருளை நீத்தவராவர்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு. (217)

பொருள்: பொருள் இல்லார்க்கு இ உலகம் இல்லாகி ஆங்கு‡ பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையாயினாற் போல, அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை-அருள் இல்லாதார்க்கு அவ்வுலக இன்பம் இல்லை.

அகலம்: ‘இல்லாகி யாங்கு’ என்பது வினையயச்சத் தொகை. ‘இல்லாகிய ஆங்கு’ என்பது அகரம் கெட்டு நின்றது எனினும், அமையும், உலகம் இரண்டும் ஆகுபெயர், அவற்றின் இன்பங்களுக்கு ஆயினமையால். பரிமேலழகர் பாடம் ‘இல்லாதி யாங்கு’. அது பிழைபட்ட பாடம்.

கருத்து: அருள் இல்லார்க்கு வீட்டுலகம் இல்லை.

பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது. (218)

பொருள்: பொருள் அற்றார் ஒரு கால் பூப்பர்-செல்வத்தை இழந்தவர் ஒரு காலத்தில் செல்வ முடையவ ராவர் ; அருள் அற்றார் அற்றார் - அருளை இழந்தவர் (அதனை) இழந்தவரே ; மற்று ஆதல் அரிது - பின்னர் அருளுடையவ ராதல் அரிது.

அகலம்: ‘அரிது’ என்பது ஈண்டு அருமைப் பொருளின் மேல் நின்றது. அருளை ஒரு காலும் கைவிட லாகா தென்று வற்புறுத்தற்காக, அருளைக் கைவிடின் அதனைப் பின்னர் அடைதல் அரிது என்றார்.

கருத்து: அருளை விடுத்தவர் மறுபடி அதனை அடைதல் அரிது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம். (219)

பொருள்: அருளாதான் செய்யும் அறம் - அருளில்லாதவன் செய்யும் அறம், தேரின்-ஆராயின், தெருளாதான் மெய்ப் பொருள் கண்டு அற்று - தெளி வில்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும்.

அகலம்: தெருளாதான் மெய்ப்பொருள் காண்டலு மில்லை; அருளா தான்அறம் புரிதலுமில்லை என்றவாறு. ‘கற்றானுங் கற்றார் வாய்க் கேட்டானு மில்லாதார், தெற்ற வுணரார் பொருள்களை-எற்றேல், அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை, நாவற்கீழ்ப் பெற்ற கனி’ - பழமொழி நானூறு.

கருத்து: அருள் இல்லாதான் அறம் புரியான்.

வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து. (220)

பொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.

அகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.

கருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.

No comments:

Post a Comment