Sunday

தவம்

இருபத்து நான்காம் அதிகாரம்-தவம்
அஃதாவது, நோன்பு.

அஃது இன்ன தென்பதை ஆசிரியர் இவ்வதிகாரத்தின் முதற் குறளில் கூறுகின்றார்.

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு. (231)

பொருள்: தவத்திற்கு உரு - தவத்திற்கு வடிவு, உற்ற நோய் நோன்றல் (உம்) உயிர்க்கு உறுகண் செய்யாமை(யும்) அற்றே - (தம்மைப்) பொருந்திய நோயைப் பொறுத்தலும் (ஓர்) உயிர்க்கு(ம்) துன்பம் செய்யாமையும் (ஆகிய) அவ்வ ளவினதே.

அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. எண்ணும்மை இரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. அற்றே என்றமையால், தனது உடம்பை வருத்தல் முதலியன தவத்தின்பால் படா என்று கொள்க. உரு, உருவம், வடிவு, வடிவம் இவை ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உம்மை உயர்வு சிறப்பு.

கருத்து: உற்ற நோயைப் பொறுத்தாலும் உயிர்க்கு உறுகண் செய்யாமை யுமே தவம்.

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது. (232)

பொருள்: தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவ வேடமும் தவ முடையவர்க்குப் பொருந்தும்; அஃது இல்லார் அதனை மேற்கொள்வது அவம் -தவம் இல்லாதார் தவ வேடத்தை (த்தம்) மேற்கொள்வது பயனற்ற செயல்.

அகலம்: முதல் ‘தவம்’ ஆகு பெயர், தவ வேடத்திற்கு ஆயினமையால். ‘தவமும் தவமுடையார்க் காகும்’ என்பதற்குத் ‘தவப் பயனே யன்றித் தவந்தானும் முற்றுவம் உடையார்க்கே ஆகும்’ என்று உரைப்பாரும் உளர். அவ் வுரை ஒரு சிறிதும் பொருந்தாது, முற்ற வத்திற்கும் முற்றவம் வேண்டும் என்று முடிவில்லாது கூறிக்கொண்டே போக நேரு மாகலான். அத்தகைய முடிவற்ற கூற்றை வட நூலார் அனவத்தா தோடம் என்பர்.

கருத்து: தவ வேடம் தவம் உடையார்க்கே பொருந்தும்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம். (233)

பொருள்: துறந்தார்க்கு துப்புரவு வேண்டி - (இல் வாழ்க்கையைத்) துறந்த வர்க்கு உணவு முதலியன (அளித்தலை) விரும்பி, மற்றையவர்கள் தவம் மறந்தார்கொல் -இல்வாழ்வார்கள் தவத்தினை மறந்தார்களோ?

அகலம்: இல்வாழ்வாரும் தவத்தினைக் கைக்கொள்ளத் தக்கவராயிருக்க, அவர் அதனைக் கைக் கொள்ளாம லிருப்பதைக் கண்டித்தவாறு. கொல் என்பது ஈண்டுக் குறிப்பு வினாப் பொருளில் வந்தது.

கருத்து: இல்வாழ்வாரும் தவத்தினைக் கைக் கொள்க.
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும். (234)

பொருள்: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் -பகைவரை அழித்தலும் நட்பினரை ஆக்குதலும், தவத்தால் எண்ணின் வரும் - தவத்தோடு (கூடி நின்று) நினைப்பின் (உடனே) எய்தும்.

அகலம்: ஆக்குதல் -செல்வம் முதலியவற்றை உடையவராக்குதல். ‘ஆன்’ உருபு ‘ஒடு’ உருபுப் பொருளில் வந்தது.

கருத்து: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் தவத்தினர் நினைத்த மாத்திரத்தில் நிகழும்.

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும். (235)

பொருள்: வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் - (தாம்) விரும்பியவற்றை விரும்பிய வாறு அடைதலால், செய் தவம் ஈண்டு முயல படும் - (அறிஞர்) செய்யும் தவத்தை இப் பிறப்பின்கண் (செய்தற்கு ஒவ்வொருவரும்) முயல வேண்டும்.

அகலம்: ‘வேண்டிய ஆங்கு’ என்பது அகரம் கெட்டு நின்றது. ‘செய் தவம்’ என்பதிலுள்ள செய் என்பதனைத் துணை வினையாகக் கொள்ளினும் அமையும்.

கருத்து: விரும்பியவற்றை யயல்லாம் தவம் தருமாகலான், அதனை விரைந்து செய்க.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. (236)

பொருள்: தவம் செய்வாரே தம் கருமம் செய்வார் -தவத்தைச் செய்பவரே தமது கருமத்தைச் செய்பவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - தவஞ் செய்யாதார் ஆசையுட் சிக்கி வீண் கருமம் செய்பவர்.

அகலம்: கருமம் - வினை. செய்வாரே என்பதன் ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘மற்று’ அசை. தருமர், நச்சர் பாடம் ‘ஆசையுட் பட்டு’. மற்றை மூவர் பாடம் ‘ஆசையிற் பட்டு’.

கருத்து: தவஞ் செய்வாரே தம் கருமம் செய்தவராவர்.

சுடச்சுடரும் பொன்போ லொளிமிகுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (237)

பொருள்: துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு -(தம்மைத்) துன்பம் வருத்த வருத்தத் தவஞ் செய்ய வல்லார்க்கு, சுட சுடரும் பொன்போல் ஒளி மிகும் - சுடுங் காலையில் ஒளிரும் பொன் போல (அறிவாகிய) ஒளி மிகும்.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஒளிவிடும்’. மணக்குடவர் பாடம் ‘சுடச் சுடப் பொன்போல’. ‘ஒளிவிடும்’ என்பதினும் ‘ஒளி மிகும்’ என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: தவம் செய்வார்க்கு அறிவு வளரும்.

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (238)

பொருள்: தன் உயிர் தான் அற பெற்றானை-தனது உயிர் ‘தான்’ என்பது நீங்கப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் -மற்றைய நிலை பேறுடைய உயிர்களெல்லாம் வணங்கும்.

அகலம்: தான் -‘தான்’ என்று அகங்கரித்தல். ‘தன் உயிர்தான் அறப் பெற்றானை’ என்பதற்குத் ‘தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை’ என்ற உரை பொருந்தாது.

கருத்து: அகங்காரம் நீங்கப் பெற்றவன் கடவுளாகப் போற்றப் படுவான்.
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு. (239)

பொருள்: நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு -தவம் இழைத்தலின் வலிமையை அடைந்தார்க்கு, கூற்றம் குதித்தலும் கை கூடும் - கூற்றத்தைக் (கடந்து) குதித்தலும் எய்தும்.

அகலம்: கூற்றத்தைக் கடந்து குதித்தலாவது, கூற்றத்தினின்று தப்புதல். கூற்றம் ‡ எமன்.

கருத்து: தவத்தைச் செய்தவர் மரணத்தைக் கடப்பர்.

இலர்பல ராகிய காரண நோற்றார்
சிலர்பலர் நோலா தவர். (240)

பொருள்: இலர் பலர் ஆகிய காரணம் நோலாதவர் பலர் - (இவ் வுலகின்கண்) வறிஞர் பலராயதற்குக் காரணம் (முன்) தவம் இழையாதார் பலர் ; (உளர் சிலர் ஆகிய காரணம்) நோற்றார் சிலர் - (இவ் வுலகின்கண்) செல்வந்தர் சிலர் ஆயதற்குக் காரணம் (முன்) தவம் இழைத்தார் சிலர்.

அகலம்: ‘உளர் சிலர் ஆகிய காரணம்’ என்பது சொல்லெச்சம் ஆகியதற்குக் காரணத்தை ஆகிய காரணம் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ நோற் பார்’. ‘ஆகிய காரணம்’ என்று ஆசிரியர் கூறியிருத்தலான், ‘நோற்றார்’ என்பதே அவர் பாடம் என்று கொள்க.

கருத்து: தவம் செய்தலும் அது செய்யாமையும் முறையே செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணம்.

No comments:

Post a Comment