Friday

ஒழுக்கமுடைமை

பதினோராம் அதிகாரம் - ஒழுக்கமுடைமை

அஃதாவது, நன்னடக்கை யுடைமை.

ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும். (101)

பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் (தன்னை யுடையார்க்கு) மேன்மையைத் தருதலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - ஒழுக்கத்தை (த் தமது) உயிரினும் (மிகப்) பேண வேண்டும்.

அகலம்: பரிமேலழகர் பாடம் ‘தரலான்’. மற்றை நால்வர் பாடம் ‘தரலால்’.

கருத்து: தன் உயிரைக் காத்தலினும் மேலாக ஒருவன் தன் ஒழுக்கத்தைக் காக்கக் கடவன்.

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை. (102)

பொருள்: பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - (ஒருவன்) வருந்திப் பேணி ஒழுக்கத்தைக் காக்கக் கடவன் ; தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (தனக்குத்) துணையானவற்றை யயல்லாம்) அறிந்து பேணி ஆராயினும் ஒழுக்கமே (தனக்குத் ) துணை (யாகலான்).

கருத்து: ஒருவனுக்கு நல்லொழுக்கமே ‘பொன்றுங்கால் பொன்றாத் துணை’.

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும். (103)

பொருள்: ஒழுக்கம் உடைமை குடிமை (ஆம்) - ஒழுக்கம் உடைமையால் (ஒருவனுக்கு) குடியுயர்வு உண்டாம் ; இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய் விடும் ‡இழுக்கத்தால் (ஒருவனுக்குத்) தாழ்ந்த குடிப்பிறப்பின் தன்மை உண்டாகிவிடும்.

அகலம்: பிறப்பு என்பது ஆகு பெயர், அதன் தன்மைக்கு ஆயினமையால். ஆம் என்னும் ஆக்கச் சொல் வருவித்து உரைக்கப் பட்டது.

கருத்து: நல் லொழுக்கத்தால் குடிப் பிறப்புயர்வும் தீ யயாழுக்கத்தால் குடிப்பிறப்புத் தாழ்வும் உண்டாம்.

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (104)

பொருள்: பார்ப்பான் ஒத்து மறப்பினும் கொள்ளல் ஆகும் - (மறைகளைக்) கற்பவன் மறைகளை மறப்பினும் (அவற்றை மறுபடியும்) கற்றுக் கொள்ளல் கூடும் ; பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - (அவன்) குடிப்பிறப்பின் ஒழுக்கம் குறையக் கெடுவான்.

கருத்து : கல்வியினும் ஒழுக்கம் மேம்பட்டது.

அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யயாழுக்க மிலான்க ணுயர்வு. (105)

பொருள்: ஒழுக்கம் இல்லான்கண் - நன்னடக்கை இல்லாதான் கண், அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - பொறாமை உடையவ னிடத்துச் செல்வம்(இல்லையாதல்) போல, உயர்வு இல்லை - உயர்ச்சி இல்லை (யாகும்).

கருத்து: ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை.

ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து. (106)

பொருள்: இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - (நன்னடக்கை யினின்று ) தவறுதலால் குற்றம் உண்டாதலைத் தெரிந்து, உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் -அறிவுடையோர்
நன்னடக்கையினின்று தளரார்.

அகலம்: ‘பாக்கு’ என்பது தொழிற்பெயர் விகுதி. முதல் ‘இன்’ ஐந்தாம் வேற்றுமைப் பொருளினும், இரண்டாவது ‘இன்’ மூன்றாம் வேற்றுமைப் பொருளினும் வந்தன.

கருத்து: அறிவுடையார் ஒழுக்கத்தினின்று தவறார்.

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி. (107)

பொருள்: ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - (மாந்தர்) நன்னடக்கையால் மேன்மையை அடைவர் ; இழுக்கத்தின் எய்தா (த)பழி (யும்) எய்துவர் - (நன்னடக்கையினின்று) தவறுதலால் அடைய வொன்னாத பழியையும் அடைவர்.

அகலம்: கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர், பொல்லாத தில்லை யயாருவற்கு - நல்லாய், இழுக்கத்தின் மிக்க விழி வில்லை யில்லை, ஒழுக்கத்தின் மிக்க வுயர்வு - பழமொழி. செய்யுள் விகாரத்தால் ‘எய்தாத’ என்பதன் ஈறும், உம்மையும் கெட்டு நின்றன.

கருத்து: ஒழுக்கத்தால் புகழையும், இழுக்கத்தால் இகழையும் அடைவர்.

நன்றுக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயயாழுக்க
மென்று மிடும்பை தரும். (108)

பொருள்: நல் ஒழுக்கம் நன்றுக்கு வித்து ஆகும் - நல்ல நடக்கை இன்பத்திற்குக் காரண மாகும்; தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய நடக்கை எஞ்ஞான்றும் துன்பம் தரும்.

அகலம்: நன்று என்பது இன்பம் எனப் பொருள் தருதலானும், எதுகை நயம் பயத்தலானும், முன் உரையாசிரியர்கள் பாடம், ‘நன்றிக்கு’.

கருத்து: நல்லொழுக்கம் இன்பத்தையும் தீ யயாழுக்கம் துன்பத் தையும் தரும்.

ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (109)

பொருள்: தீய வழுக்கியும் வாயால் சொல்லல் - தீய சொற்களை நழுவியும் வாயினாற் சொல்லுதல், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாது - நல்ல நடக்கை யுடையார்க்கு இயலாது.
அகலம்: ஏகாரம் அசை. மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஒல்லாதே’. மற்றை மூவர் பாடம் ‘ஒல்லாவே’. ‘ஒல்லாதே’ என்பது ஒருமை வினையா யிருத்தலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: ஒழுக்க முடையவர் தீய சொற்களை ஒருபோதும் சொல்லார்.

உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார். (110)

பொருள்: பல கற்றும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - பல நூல்களைக் கற்றும் உயர்ந்தாரோடு பொருந்த நடத்தலைக் கல்லாதவர், அறிவு இல்லாதார் - அறிவு இல்லாதவர்.
அகலம்: ‘இல்லாதார்’ என்பது செய்யுள் விகாரத்தால் ‘லகர’ வொற்றுக் கெட்டு நின்றது. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றமையான், உலகம் என்பதற்கு உயர்ந்தார் எனப் பொருள் உரைக்கப்பட்டது.

கருத்து: ஒருவன் உயர்ந்தோர் நடையைக் கைக் கொள்க.

No comments:

Post a Comment