Sunday

வெகுளாமை

இருபத்தெட்டாம் அதிகாரம் - வெகுளாமை
அஃதாவது, வெகுளாதிருத்தல். வெகுளல் -கோபித்தல்.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென். (271)

பொருள்: செல் இடத்து காப்பான் சினம் காப்பான் - (வெகுளி) செல்லும் இடத்து (செல்ல விடாது) காப்பவன் வெகுளியைக் காப்பவன் (ஆவான்) ; அல் இடத்து காக்கில் என் காவா(த) கால் என்- (வெகுளி) செல்லாத விடத்து (வெகுளியைக்) காத்தால் யாது பயன்? காவாத பொழுது யாது பயன்? (ஒரு பயனும் இல்லை).

அகலம்: செல்லிடமாவது, வெகுளி செல்லக் கூடிய இடம். அஃதாவது, தம்மின் மெலியாரிடம். செல்லாத விடத்து வெகுளியைக் காத்ததாகச் சொல்லல் முடியாது, அவ் விடத்து வெகுளியைச் செலுத்தின் அது தடுக்கப்பட்டுப் போ மாகலான். செல்லாத இடம்‡ தம்மின் வலியாரிடம். தருமர் பாடம் ‘செல்லிடத்திற்’, ‘அல்லிடத்திற்’. மற்றை நால்வர் பாடம் ‘காக்கினென்’. மணக்குடவர் பாடம் ‘காக்கி லென்’. ‘காவாக்கா லென்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான், ‘காக்கிலென்’ என்னும் மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: மெலியாரிடத்து வெகுளியைக் காக்கக் கடவர்.

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற. (272)

பொருள்: செல்லா(த) இடத்து சினம் தீது -செல்லாத இடத்து (த்தன்) வெகுளி (தனக்கு இம்மையில்) தீமையை விளைக்கும் ; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - செல்லும் இடத்தும் அது போல (த் தனக்கு மறுமையில்) தீமையைத் தருவன பிற இல்லை.

அகலம்: தன்னின் வலியவனிடத்துச் சினத்தைச் செலுத்தின், அவனால் இம்மையில் தனக்குத் தீங்கு விளையும் எனவும், தன்னின் மெலியவனிடத்துச் சினத்தைச் செலுத்தின், அதனால் மறுமையில் தனக்குத் தெய்வ தண்டனை கிடைக்கும் எனவும் கூறியவாறு.

கருத்து: தன்னின் மெலியவனிடத்தாயினும் வலியவனிடத்தாயினுஞ் செலுத்தப்படும் வெகுளி தனக்குத் தீங்கு பயக்கும்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும். (273)

பொருள்: யார்மாட்டும் வெகுளியை மறத்தல் -(ஒருவன்) எவரிடத்தும் வெகுளியை மறக்கக் கடவன்; அதனான் தீய பிறத்தல் வரும் - வெகுளியால் தீய செயல்கள் பிறத்தல் உண்டாம் (ஆகலான்).

கருத்து: வெகுளி தீமையைத் தருதலான், எவரிடத்தும் வெகுளி கொள்ளற்க.

நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற. (274)

பொருள்: நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் -(ஒருவனது) முகச் சிரிப்பையும் அகக் களிப்பையும் அழிக்கும் வெகுளியைப் போல, பிற பகையும் உளவோ ‡மற்றைய பகைகளும் உள்ளனவோ (இல்லை).

கருத்து: வெகுளி தனது சிரிப்பையும் களிப்பையும் கெடுக்கும்.

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம். (275)

பொருள்: தான் தன்னை காக்கின் சினம் காக்க- ஒருவன் தன்னைக் காக்க விரும்பின் (தன்னிடம்) வெகுளி (வராமல்) காக்கக் கடவன், காவா(த) கால் சினம் தன்னையே கொல்லும் - காவாத பொழுது வெகுளி தன்னையே அழிக்கும் (ஆகலான்).

அகலம்: ‘காக்க விரும்பின்’ என்பதைக் ‘காக்கின்’ என்றார்.

கருத்து: ஒருவன் வெகுளி அவனைக் கொல்லும்.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும். (276)

பொருள்: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - வெகுளி என்று சொல்லப் படும் தீ, இனம் என்னும் ஏம புணையை சுடும் - சுற்றம் என்று சொல்லப்படும் காப்புத் தோணியை எரிக்கும்.

அகலம்: தான் சேர்ந்த பொருளை அழித்தலால் ‘தீ சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற பெயர் பெற்றது. கொல்லி என்பது வினையாலணையும் பெயர். இத் தீ ஏனைய தீப் போலல்லாமல் தன்னைச் சேர்ந்தாரையும் தன்னைச் சேராதாரையும் ஒருங்கு அழிக்கும் என்றார்.

கருத்து: வெகுளி யுடையானை விட்டு அவன் சுற்றத்தாரும் நீங்குவர்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (277)

பொருள்: சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு - வெகுளியை (க் கொள்ளத் தக்க) பொருள் என்று கொண்டவன் அழிவுறுதல், நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - நிலத்தின்கண் (கையால்) அடித்தவனுடைய கை பிழையாதாற் போலும்.

அகலம்: பிழையாதற்று என்பது எதிர்மறை வினையயச்சத் தொகை. அது பிழையாதால் அற்று என விரியும். மணக்குடவர் பாடம் ‘நிலத் தெறிந்தான்’.

கருத்து: வெகுளியைக் கொண்டவன் அழிதல் திண்ணம்.

இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (278)

பொருள்: எரி இணர் தோய்வு அன்ன இன்னா செய்யினும் -தீயின் சுடர்கள் சுடுதல் போன்ற துன்பங்களை (ஒருவன்) செய்யினும், புணரின் வெகுளாமை நன்று - கூடுமாயின் வெகுளா திருத்தல் நன்மை.

அகலம்: இண ரெரி தோய்வால் உளதாகும் இன்னா வன்ன இன்னாவை இண ரெரி தோய் வன்ன இன்னா என்றார். புணரின் என்பதற்கு அவ் வின்னாவைச் செய்தவர் தன்பால் வந்து சேரின் என்று உரைப்பினும் அமையும்.

கருத்து: தனக்குத் தீங்கு செய்தார்பாலும் வெகுளாதிருத்தல் நன்று.

உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யயனின். (279)

பொருள்: உள்ளத்தால் வெகுளி உள்ளான் என்னின் -(ஒருவன்) மனத்தால் சினத்தை நினையான் என்றால், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - (அவன்) நினைத்தன வெல்லாம் உடனே வந்து சேரும்.

அகலம்: மனத்தால் நினைத்தல், வாயாற் சொல்லல் என்பன உலக வழக்கு. தாமத்தர், நச்சர் பாடம் ‘உள்ளிய தெல்லாம்’.

கருத்து: வெகுளி இல்லாதான் விரும்பிய எல்லாவற்றையும் அடைவன்.

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (280)

பொருள்: சினத்தை இறந்தார் இறந்தார் அனையர் -சினத்தின் கண் அளவு கடந்தார் செத்தாரை ஒப்பர்; சினத்தை துறந்தார் துறந்தார் துணை - வெகுளியை விடுத்தவர் துறந்தாரை ஒப்பர்.

அகலம்: சினத்தை என்பது சிங்க நோக்காக ஈண்டு வைக்கப் பட்டிருக் கின்றமையால், அதனை முன்னரும் பின்னரும் கூட்டிப் பொருள் உரைக்கப் பட்டது. முன்னர்க் கூட்டிய விடத்து அதனை வேற்றுமை மயக்கமாகக் கொள்க.

கருத்து: வெகுளியை விட்டார் துறவிகளை ஒப்பர்.

No comments:

Post a Comment