Monday

கொல்லாமை

முப்பதாம் அதிகாரம் - கொல்லாமை
அஃதாவது, (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல்

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யயல்லாந் தரும். (291)

பொருள்: அற வினை யாது என்னின் கொல்லாமை -அற செயல் யாது என்றால் (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல் ; கோறல் பிறவினை எல்லாம் தரும் -கொல்லுதல் மறச் செயல் எல்லாவற்றையும் கொடுக்கும்.

அகலம்: கொலையையே செய்யத் துணிந்தவன் மற்றைய பாவங்களை யயல்லாம் செய்வா னாகலான். கோறல் பிறவினை யயல்லாந் தரும் என்றார். பிற வினை எல்லாம் என்பதற்குப் பாவங்கள் எல்லாவற்றின் பயன்களையும் என்று உரைப்பாரும் உளர்.

கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே உயர்ந்த அறம்.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (292)

பொருள்: பகுத்து உண்டு பல் உயிர் (உம்) ஓம்புதல் -(தம் உணவைப் பிற உயிர்களுக்குப்) பகுந்து கொடுத்து (த்தாம்) உண்டு பல உயிர்களையும் பேணுதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -(அற) நூலோர் (சிறந்த அறங்களென எடுத்துத்) தொகுத்துச் சொல்லியவற்று ளெல்லாம் தலையாய அறம்.

அகலம்: தலையாய அறத்தைத் தலை என்றார். தொகுத்தல் - ஒன்று சேர்த்தல். தொகுத்துச் சொல்லுதலைத் தொகுத்தல் என்றார். முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து: பகுத்து உண்டு பல உயிரையுங் காத்தல் தலையாய அறம்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (293)

பொருள்: ஒன்றாக நல்லது கொல்லாமை - ஒப்பற்றதாக(நிற்கும்) நல்வினை (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தல்; அதன்பின் சார பொய்யாமை நன்று - கொல்லாமையின் பின் நிற்கப் பொய்யாமை நன்று.

அகலம்: தள்ள வேண்டிய மறங்களுள் கொலை முதலாவதென்றும் , பொய் இரண்டாவதென்றும் ஈண்டுக் கூறினார். கொள்ள வேண்டிய அறங்களுள் வாய்மை முதலாவ தென்று ‘யாமெய்யாக் கண்டவற்றுள்’ என்னும் தொடக்கத்துக் குறளில் கூறினார். மற்று என்பது அசை. தருமர் பாடம் ‘பின் சாரல்’.

கருத்து: ஒழுக்கங்களில் உயர்ந்தது கொல்லாமை; அதற்கு அடுத்தது பொய்யாமை.

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி. (294)

பொருள்: நல் ஆறு என படுவது யாது என்னின் - நல்ல நெறி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்றால், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - யாதானும் ஓர் உயிரையும் கொல்லா திருத்தலைச் சூழும் நெறி.

அகலம்: சூழ்தல் -எண்ணுதல்.

கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே வீட்டினை அடைதற்கு நல்ல நெறி.

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை. (295)

பொருள்: நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - (இல்வாழ்க்கை) நிலையை அஞ்சித் துறந்தாரு ளெல்லாம், கொலை அஞ்சி கொல்லாமை சூழ்வான் தலை - கொலையை அஞ்சி (ஓர் உயிரையும்) கொல்லாதிருத்தலை எண்ணுபவன் தலையானவன்.

அகலம்: துறவு நிலையின்கண் நிற்பான் பெறும் பேறுகளை யயல்லாம் இல்வாழ்க்கைநிலையின்கண் நிற்பான் பெறுவன் என மேலே கூறியிருத்த லானும், இல்வாழ்க்கையை நடாத்தும் திறமை இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலார் துறத்தாலானும், ‘இல் வாழ்க்கை நிலையை அஞ்சி’ எனப் பொருள் உரைக்கப்பட்டது.

கருத்து: ஓர் உயிரையும் கொல்லாதவன் துறவிகளுள் உயர்ந்தவ னாவன்.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று. (296)

பொருள்: உயிர் உண்ணும் கூற்று‡ உயிரை உண்ணும் கூற்றம், கொல் லாமை மேல் கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது- கொல்லாமை யாகிய நோன்பைக் கைக்கொண்டு ஒழுகுபவன் வாழும் நாளின் மேல் செல்லாது.

அகலம்: கூற்றை வென்றவர் மார்க்கண்டன், நந்திகேசுரன், சிவேதன். இவர்கள் கூற்றை வென்ற விவரங்களை முறையே கந்த புராணத்திலும், இலிங்க புராணத்திலும், கூர்ம புராணத்திலும் காண்க. கூற்று - எமன் ‡ மரணம்.

கருத்து: கொல்லாமையைக் கைக் கொண்டவனைக் கூற்றுவன் கொல்லான்.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. (297)

பொருள்: தன் உயிர் நீப்பினும் - (பிறிது ஓர் உயிரை நீக்காத வழி அது) தன் உயிரை நீக்குமாயினும், தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிது (ஒரு) பிராணியின் இனிய உயிரை நீக்கும் செயலைச் செய்யற்க.

அகலம்: தற் காப்பு நிமித்தமும் துறவி பிற உயிரை நீக்கலாகா தென்ற வாறு.

கருத்து: தன்னுயிரைக் கொல்ல வரினும் மன்னுயிரைக் கொல்லற்க.

நன்றாகு மாக்கம் பெறுமெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை. (298)

பொருள்: நன்று ஆகும் ஆக்கம் பெறும் என்னினும் -(கொலையால்) நன்கு வளரும் செல்வத்தைப் பெறுவர் என்றாலும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - சால்புடையார்க்குப் பிற உயிரைக் கொன்று ஆகும் செல்வம் கடைப்பட்டது.

அகலம்: கடைப்பட்டதனைக் கடை என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பெரிதெனினும்’. நன்றாகு மாக்கம் பெரிதெனினும் என்பது பொருத்தமான பொருளைத் தாராமையானும், ‘பெறுமெனினும்’ என்பது ஈண்டு இன்றியமை யாது வேண்டப்படுவதாகலானும், ‘பெறுமெனினும்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. ‘சான்றோர் பெறும்’ என்பது ‘பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில், செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே’ என்னும் நன்னூற் சூத்திரத்திற்கு மாறுபடாதோ எனின், அச் சூத்திரம் ‘பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியோடு கொள்ளா’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருளை உள்ளவாறு உணராது செய்யப் பட்டது என்க. என்னை? தன்மை, முன்னிலை, படர்க்கைப் பன்மைச் சொற்கள் நிகழுங்காலத்துச் செய்யும் என்னும் சொல்லோடு பொருந்தா என்று தொல்காப்பியனார் கூறியிருத்தலான், அம்மூன்றிடத்துப் பன்மைச் சொற்களும் இறந்தகாலத்துச் செய்யும் என்னும் சொல்லோடும், எதிர்காலத்துச் செய்யும் என்னும் சொல்லோடும் பொருந்தும் என்பதை நன்னூலார் உணராது போயினர். செய்யும் என்னும் சொல் தன்மைப் பன்மைச் சொல்லைக் கொண்டு முடிந்ததற்கு உதாரணம் - ‘வையமகளை’ என்று தொடங்கும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுளில் ‘என்னும் ... யாம் என்பது’. (என்னும் யாம் என்று சொல்லுவம் யாங்கள்) முன்னிலைப் பன்மையில் வந்ததற்கு உதாரணம்‡‘முதுமறை யந்தணிர் முன்னியதுரைமோ’. (உரை மோ-உரையுமோ) - மணிமேகலை‡ காதை 13 - வரி 56. படர்க்கைப் பன்மையில் வந்ததற்கு உதாரணம்‡‘அறிந்தார் வீடெய்தும்’-‘எந்நூற்கள்’ என்னும் தொடக்கத்து அறநெறிச்சாராச் செய்யுள். இவை தவிர இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. நன்னூலைப் பேரிலக்கணமாகக் கொண்டு கற்ற நூற்பதிப்பாசிரியர் பலர் மேற்கண்ட நன்னூற் சூத்திரத்திற்கு இயையுமாறு பல நூற் பாடங்களைத் திருத்தியுள்ளனர். இது மிக வருந்தத் தக்கது.

கருத்து: கொலையால் ஆக்கம் வருமெனினும் கொலையினைச் செய்யற்க.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. (299)

பொருள்: கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலின ராகிய மாக்கள், புன்மை தெரிவார் அகத்து வினை புலையர் - கீழ்மைத் தன்மையை அறிவாருள் தொழிற் புலையர் (ஆவர்).

அகலம்: புலை வினையர் -என்பதை வினைப் புலையர் எனக் கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. இவரை உலகத்தார் கன்ம சண்டாளர் என்பர். மாக்கள் என்றமையால், கொலை வினையர் வடிவால் மக்களே ஆயினும், செயலால் விலங்கை ஒப்பர் என்று கொள்க.

கருத்து: கொலைத் தொழில் புரிபவர் புலையரா வர்.

உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (300)

பொருள்: செயிர் உடம்பின் செல்லா(த) தீ வாழ்க்கை யவர் - குற்றம் உடம்பினின்று நீங்காத (இரந்துண்ணும்) தீய வாழ்க்கையை உடையவரை, உடம்பின் உயிர் நீக்கியார் என்ப (ஆன்றோர்) - (முற் பிறப்பில்) உடம்பினின்று உயிரை நீக்கியவர் என்பர் ஆன்றோர்.

அகலம்: செயிர் - உறுப்புக்குறைவு அல்லது குட்டம். மணக்குடவர் பாடம்‘ உயி ருடம்பு நீக்கியார்’, ‘செயிருடம்பூண் செய்யாத வாழ்க்கையவர்’.

கருத்து: இப் பிறப்பில் குட்ட நோய் கொண்டு இரப்பவர் முற் பிறப்பில் கொலை செய்தவர்.

துறவறவியல் முற்றிற்று.

No comments:

Post a Comment