Monday

ஊழ்

ஊழியல்
அஃதாவது, விதியின் இயல்பு.

முப்பத்தைந்தாம் அதிகாரம் - ஊழ்
அஃதாவது, விதி.

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி. (341)

பொருள் : கை பொருள் ஆகு ஊழால் அசைவு இன்மை தோன்றும் -கைப் பொருள் ஆகும் விதியால் சோம்பலின்மை தோன்றும்; கை பொருள் போகு ஊழால் மடி தோன்றும் - கைப் பொருள் போகும் விதியால் சோம்பல் தோன்றும்.

அகலம்: கைப் பொருள் என்பது சிங்க நோக்காக நிற்றலின், அது முன்னரும் பின்னரும் கூட்டி உரைக்கப்பட்டது. கை என்பது துணைப் பெயர். ‘ஆகு’ ‘போகு’ வினைத் தொகைகள்.

கருத்து: நல் விதிக்கு அடையாளம் சோம்ப லின்மை.

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை. (342)

பொருள்: இழவு ஊழ் (உற்ற கடை) பேதை படுக்கும் -(கைப் பொருளை) இழத்தற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது ஒருவனை) அறிவிலனாகச் செய்யும் ; ஆகல் ஊழ் உற்ற கடை அறிவு அகற்றும் - (கைப் பொருள்) ஆகுதற்கு உரிய விதி உற்ற இடத்து (அஃது அவனது) அறிவைப் பெருக்கும்.

அகலம்: ‘உற்றக் கடை’ என்பது முன்னுங் கூட்டி உரைக்கப்பட்டது. இழவூழ், ஆகலூழ் என்பன நான்காம் வேற்றுமையின் குவ் வுருபும் தகுதிப் பொருளும் உடன் தொக்க தொகைகள்.

கருத்து: நல் விதி வந்தக்கால் அறிவு வளரும் ; தீ விதி வந்தக்கால் அறிவு குறையும்.

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும். (343)

பொருள்: நுண்ணிய நூல்பல கற்பினும் - (ஒருவன்) நுண்ணிய (பொருள்களை யுடைய) நூல்கள் பலவற்றைக் கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் -பின்னும் தனது விதியின் அறிவே மிகுந்து நிற்கும்.

கருத்து: ஒருவனுக்கு விதியின் அறிவே மிகுந்து நிற்கும்.

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. (344)

பொருள்: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின்கண் விதி இரண்டு வேறு (வகைப்பட்டது); திரு(வினர் ஆதல்) வேறு தெள்ளியர் ஆதலும் வேறு -செல்வத்தை உடையவராதற்கு (உரிய விதி) வேறு ) அறிவை உடையவ ராதற்கு (உரிய விதி) வேறு.

அகலம்: பின்னர்த் ‘தெள்ளிய ராதல்’ என்று கூறுகின்றமையான், முன்னர்த் திருவினர் ஆதல் என்று கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆதல்’ இரண்டும் உருபும் பொருளும் உடன் தொக்க தொகைகள்.

கருத்து: செல்வந்த ராதற்கும் அறிவுடைய ராதற்கும் உரிய விதிகள் வெவ் வேறு.

நல்லவை யயல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (345)

பொருள்: செல்வம் செயற்கு தீயவும் நல்ல ஆம் - செல்வத்தை ஆக்குதற்குரிய விதிக்குத் தீய செயல்களும் நல்ல செயல்களாம் ; (செல்வம் அழித்தற்கு) நல்லவை எல்லாம் தீய ஆம்‡செல்வத்தை அழிப்பதற்குரிய விதிக்கு நல்ல செயல் களெல்லாம் தீய செயல்கள் ஆம்.

அகலம்: நல்லவை எல்லாம் தீய வாம் என்றமையால், செல்வம் அழித்தற்கு என்பதைச் சொல்லெச்சமாகக் கொண்டு பொருள் உரைக்கப்பட்டது. செயல்என்பதும், சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்ட அழித்தல் என்பதும் ஆகுபெயர்கள், முறையே அவற்றின் விதிகளுக்கு ஆயினமையால்.

கருத்து: நல்ல விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் நல்லனவாம் ; தீய விதி யுற்ற விடத்துச் செய்வன எல்லாம் தீயவாம்.

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம. (346)

பொருள்: பால் அல்ல பரியினும் ஆகா வாம் - விதியால் (தம் முடையன) அல்லாத பொருள்கள் முயன்று வருந்தினும் உண்டாகாவாம். தம உய்த்து சொரியினும் போகா ‡ (விதியால்) தம்முடைய பொருள்கள் (சேய்மைக்கண்) கொண்டு போய் எறியினும் போகா.

அகலம்: ‘வருந்தி யழைத்தாலும் வாராத வாரா ; பொருந்துவன போமினென் றாற் போகா’. -நல்வழி.

கருத்து: விதிப்படி தமக்குரியன தம்மை விட்டு நீங்கா.

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (347)

பொருள்: வகுத்தான் வகுத்த வகை அல்லால் - (அவரவர் வினைப் பயனை அவரவர்க்கு) வகுத்த இறைவன் வகுத்த படி அல்லாமல், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - கோடிப் பொருள் ஈட்டினார்க்கும் துய்த்தல் இல்லை.

அகலம்: துய்த்தல் - அனுபவித்தல். வகுத்தல் - பிரித்தல்.ஈட்டல் - சேமித்தல். தாமத்தர் பாடம் ‘தொகுத்தாலும்’.

கருத்து: தம் விதிக்குத் தக்கபடியே இன்பம் துய்ப்பர்.

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின். (348)

பொருள்: உறல் பால ஊட்டா(து) கழியும் என்னின் - பொருந்தற் பகுதியன வாகிய விதிகள் (தமது பயன்களைக் ) கொடாமல் நீங்கும் என்றால், துப்புரவு இல்லார் துறப்பார் - செல்வம் இல்லாதவர் துறப்பார்.

அகலம்: விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்குதலும் இல்லை, வறிஞர் துறக்கப் போவதும் இல்லை என்றவாறு. இக்குறள் பொய்த்தற் குறிப்பணி. ‘மன்’ அசை. துப்புரவு - நுகர்ச்சிப் பொருள்கள்.

கருத்து: விதிகள் தமது பயன்களைக் கொடாமல் நீங்கா.

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன். (349)

பொருள்: நன்று ஆம் கால் நல்லவா (க) காண்பவர் -(தாம் முன் செய்த) நல் வினைகள் விளையுங்கால் இன்பங்களாக உணர்பவர், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன்-(தாம் முன் செய்த) தீவினைகள் விளையுங் கால் துன்பம் உறுவது யாது காரணம்?

அகலம்: நன்று, அன்று என்பன சாதி யயாருமைப் பெயர்கள்.

கருத்து: இன்பமும் துன்பமும் தம் முன் வினைப் பயன்களே.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (350)

பொருள்: ஊழின் பெரு வலி யா உள - விதியைப் போலப் பெரிய வலியையு டையவை எவை உள்ளன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும்.

அகலம்: ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த வினையின் பயனை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியாதென்றார். அஃதாவது, ஒருவன் ஒரு வினையைச் செய்து அதன் பயன் அவனைப் பொருந்தும் காலையில் அப் பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவனால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விளைவாகிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்ற வேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார்.

கருத்து: விதியைப்போல வலி யுடையது வேறு யாதொன்றும் இல்லை.

ஊழியல் முற்றிற்று.

அறப்பால் முற்றிற்று.

No comments:

Post a Comment